கீவ்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் கீவில் விமான தாக்குதல் நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷியாவின் படைகளை முன்னேற விடாமல் உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளனர். இதனால் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் தரப்பில் 1300 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று கூறி உள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ‘உக்ரைன் தலைநகர் மீது தொடர்ச்சியாக வெடிகுண்டுகளை வீசவும், நகரத்தை கைப்பற்ற குடியிருப்புவாசிகளை கொல்லவும் ரஷியா முயற்சி மேற்கொள்ளும். அதுவே அவர்களின் இலக்கு என்றால், அவர்கள் வரட்டும். அவர்கள் குண்டுவீச்சை நடத்தி முழு பிராந்தியத்தின் வரலாற்று நினைவகத்தையும், கீவின் கலாச்சார வரலாற்றையும், ஐரோப்பாவின் வரலாற்றையும் அழித்தால், அவர்கள் கீவில் நுழைய முடியும்’ என்றார்.