சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் ஆட்சி திமுக ஆட்சி -முதல்வர் ஸ்டாலின்

மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நடைபெறும் 30-வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கரிகாலன் விருது வழங்கப்படும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு வாக்குறுதி தந்தார்கள். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அது நடக்காமல் போய்விட்டது.  இப்போது மீண்டும் ஆட்சிமாற்றம் வந்திருக்கிறது. எனவே, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கலைஞர் என்ன உறுதிமொழி கொடுத்தாரோ, அது நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், செய்வதைத்தான் சொல்லும் என்று கலைஞர் அவர்கள் எந்த அடிப்படையிலே அந்த உறுதிமொழியை மக்களிடத்திலே தந்தாரோ, அதை இன்றைக்கு நாங்கள் கூடுதலாக நிறைவேற்றிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். 
சொன்னதை மட்டுமல்ல, செய்வதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி. ஏனென்றால், தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்கள். 16 அடி பாய்ந்தால் எங்கள் தலைவருக்கு அது பெருமை இல்லை, 32 அடி பாய்ந்தால்தான் எங்கள் தலைவருக்கு பெருமை கிடைக்கும். 
மத்திய – மாநில அரசுகளின் உட்கட்டமைப்பிற்கு அடித்தளம் போடக்கூடியவர்கள் நீங்கள். ஆம் – நீங்கள் எல்லாம் இந்த நாட்டை கட்டமைப்பதில் ஒன்றிய – மாநில அரசுகளுடன் கை கோர்த்துப் பயணிக்கிறீர்கள். அந்தப் பயணத்தினுடைய ஒரு அங்கமாகவே  இந்த 30-வது அகில இந்திய கட்டுநர்கள் மாநாட்டை அகில இந்திய கட்டுநர்கள் சங்கத்தின் தென்னக மையம் நடத்துகிறது. 2500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தென்னக மையம் – அகில இந்தியக் கட்டுநர்கள் சங்கத்தின் பழமையான மையம் என்பதையும் தாண்டி, “தாய் மையம்” என்பதாலோ என்னவோ – அதே தாய் மனப்பான்மையோடு, மாநிலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் வேலை வழங்கும் அமைப்பாக இது திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல – வேலைவாய்ப்பிற்கும் உறுதுணையாக இருப்பதுதான் இந்தச் சங்கத்தின் சிறப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.