சாதி மோதல்களைச் சமூக ஒழுங்குப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட வன அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அப்போது, சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரின் கடமை எனத் தெரிவித்தார்.
சமூக வலைத்தளத்தில் தகவல் தொழில்நுட்பத்தை அழிவுக்குப் பயன்படுத்திச் சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தப் பார்ப்பவர்களைக் களையெடுக்க வேண்டும் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய அரசில் இருப்பதைப் போல் நேசனல் மீடியா அனலிட்டிக்ஸ் சென்டர், சோசியல் மீடியா லேப் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மத மோதல்களை அரசியல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உருவாக்குவதைத் தடுக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
முதல்வரின் முகவரித் துறையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து குறைகளைத் தீர்த்ததற்காகத் திருச்சி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பாகப் பணிபுரிந்த நீலகிரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் திருவண்ணாமலை, தேனி, நாமக்கல் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறையில் சிறப்பாகச் செயல்பட்ட இராமநாதபுரம், கன்னியாகுமரி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொழிலாளர் நலத்துறையில் சிறப்பான செயலாக்கத்துக்குக் கரூர், கோவை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கோவளம் கடற்கரையைத் தூய்மையான பாதுகாப்பான கடற்கரையாகப் பேணியதற்காக டென்மார்க் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை வழங்கிய நீலக்கொடி சான்றிதழ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிய உணவருந்தினார்.