புதுடெல்லி: போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் சுமியில் இருந்து பிரதமர் மோடியின் முயற்சியால் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்திய மாணவர் ஒருவர் உட்பட பலர் இறந்துள்ளனர். மாணவர்கள் உட்பட உக்ரைனில் உள்ள இந்தியர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் விமானங்கள் மூலம் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். எனினும், உக்ரை னின் சுமி பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து தீவிரமாக இருந்ததால் அந்தப் பகுதியில் சிக்கித் தவித்த 650-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் எழுந்தது. சுமியில் உள்ள மாணவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் வீடியோ காட்சிகளை அனுப்பினர். இதனால், பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று மாணவர்கள் பாதுகாப்பாக வெளி யேற இருநாடுகளும் தாக்குதலை நிறுத்தி ஒத்துழைப்பு அளித்தன. இதையடுத்து, சுமியில் இருந்து 650-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பேருந்துகளில் உக்ரைனின் போல்டாவா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
சுமியில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டதன் பின்னணியில் பிரதமர் மோடியின் 2 தொலைபேசி அழைப்புகள் மிகப்பெரிய பங்காற்றியுள்ளன. கடந்த திங்கட்கிழமையன்று ரஷ்யஅதிபர் புதின் மற்றும் உக்ரைன்அதிபர் ஜெலன்கி ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்து அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்றும் சுமியில் தவிக்கும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற வழி செய்ய வேண்டும் என்றும் இரு நாடுகளின் தலைவர்களையும் பிர தமர் மோடி கேட்டுக் கொண்டார்.
மோடியின் கோரிக்கையை இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். சுமியில் தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்டு மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற ஒத்து ழைப்பு அளிப்பதாக பிரதமர் மோடியிடம் இரு நாடுகளின் தலைவர்களும் உறுதிய ளித்தனர்.
இதையடுத்து, போர் நிறுத்தம்செய்யப்பட்டு சுமியில் இருந்துமாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களிடம் 2 தொலைபேசி அழைப்புகள் மூலம் பேசிய பிரதமர் மோடியின் முயற்சியால் சுமியில் இருந்து இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். -பிடிஐ
மோடியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். சுமியில் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டு மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற ஒத்துழைப்பு அளிப்பதாக பிரதமர் மோடியிடம் இரு நாடுகளின் தலைவர்களும் உறுதியளித்தனர்.