ஆமதாபாத்-‘அரசியல் சட்டம் மற்றும் மத சுதந்திரம் என்ற போர்வையில், நாட்டில் மதவெறி அதிகரித்து வருகிறது. மேலும், ஹிந்துக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியும் நடக்கிறது’ என, ஆர்.எஸ்.எஸ்., கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா எனப்படும், தேசிய பொதுக் குழுவின் மூன்று நாள் கூட்டம், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடக்கிறது. கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டில், பிரிவினை சக்திகளின் சவால்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அரசியல் சட்டம், மதசுதந்திரம் என்ற பெயரில் மதவெறி அதிகரித்து வருகிறது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளது,
இதற்கு உதாரணம். மதச்சார்பின்மை என்ற போர்வையில், ஹிந்துக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. ஹிந்துக்களை பிரிக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடக்கின்றன. ஒரு பிரிவினரிடம், ‘நீங்கள் ஹிந்துக்கள் இல்லை’ என தொடர்ந்து பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், ஹிந்துக்களை மதமாற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.
சர்வதேச அளவில், இந்தியாவையும், ஹிந்துக்களையும் அவமானப்படுத்த, ஹிந்து விரோத சக்திகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றை முறியடிக்க, ஹிந்து சமூகத்தில் ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பொதுக் குழு கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொசபலே உட்பட நாடு முழுவதிலும் இருந்து, 1,248 பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். முன்னதாக ஆர்.எஸ்.எஸ்., இணைச் செயலர் மன்மோகன் வைத்யா கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இணையும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுக்குள், அனைத்து நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., கிளையை துவக்குவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் போது, மக்கள் சேவை பணிகளில், நாடு முழுதும் 5.50 லட்சம் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.