புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2ம் கட்ட கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில், முதல் கட்டத் தொடரை விட மாநிலங்களவைக்கு கூடுதலாக 19 மணி நேரம் கிடைக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11ம் தேதி வரை முதல் கட்ட தொடர் நடைபெற்றது. இதில், ஜனாதிபதி உரையாற்றி கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் பட்ஜெட் குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. முதல் கட்ட தொடரில் இரு அவையிலும் எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், பட்ஜெட் தொடரின் 2ம் கட்ட கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் கட்ட கூட்டத் தொடரில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு அவைகளும் தனித்தனி நேரங்களில் நடந்தன. ஆனால், 2ம் கட்ட தொடர் ஒரே நேரத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, முதல் கட்ட தொடரில் மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. தற்போது, 2ம் கட்ட தொடரில் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்க உள்ளது. இடையில் 1 மணி நேரம் உணவு இடைவேளை விடப்படும். மாநிலங்களவையில் மொத்தம் 19 அமர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம், 2ம் கட்ட தொடரில் இந்த அவைக்கு 19 மணி நேரம் கூடுதலாக கிடைக்கும் என்றும், 2ம் கட்ட தொடரில் மாநிலங்களவை மொத்தம் 64 மணி நேரம் 30 நிமிடங்கள் செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.