ஹாசன் : பேலுாரின் கடேகர்ஜி கிராமத்தில், இரண்டு பேரை பலிவாங்கிய காட்டு யானைகள், நேற்றும் அட்டகாசத்தை தொடர்ந்தன. விவசாயிகளின் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயிர்களை நாசமாக்கின.ஹாசன் பேலுாரின், கடேகர்ஜி கிராமத்தில், நேற்று முன் தினம் காபி தோட்டத்தில் பணியாற்றிய, இரண்டு கூலித்தொழிலாளர்களை, காட்டு யானைகள் மிதித்து கொன்றன.
இந்த சம்பவத்தால், கிராமத்தினர் கோபமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.நேற்றும் கூட மத்தாவரா, ஹளே பிக்கோடு கிராமங்களில், விவசாயிகள் தினேஷ், பிரகாஷூக்கு சொந்தமான வாழை, பாக்கு, காப்பி விளைச்சலை தின்றும், மிதித்தும் நாசமாக்கின. விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டமடைந்தனர்.யானைகளின் தாக்குதலுக்கு, இரண்டு தொழிலாளர்கள் பலியானதால், காபி தோட்டம், வயல்கள் உட்பட, மற்ற இடங்களில் பணிக்கு வரவே, கூலித்தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
இதே சூழ்நிலை தொடர்ந்தால், விவசாயத்தையே கைவிட வேண்டி வரும் என, விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.விவசாயி பிரகாஷ் கூறியதாவது:பல ஆண்டுகளாக, கஷ்டப்பட்டு வளர்த்த பாக்கு தோட்டம், காட்டு யானைகளால் அழிந்துவிட்டது. யானைகளை இடம் மாற்றாவிட்டால், நாங்களே இறக்கும் சூழ்நிலை உருவாகும். காட்டு யானைகளை கொல்லுங்கள்; இல்லையென்றால், எங்களுக்கு விஷம் கொடுத்து விடுங்கள். செத்து போகிறோம்.லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளைச்சல் பாழாகி விட்டது. அரசு, குறைந்த நிவாரணம் கொடுக்கிறது. நாங்கள் என்ன செய்வது. எங்கள் பிரச்னைகளுக்கு, நிரந்தர தீர்வு வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement