திருவனந்தபுரம்: கொச்சியை சேர்ந்த அனீஸ் அன்சாரி (33), பாலாரிவட்டம் பகுதியில் மேக்கப் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இங்கு திருமணத்துக்கான மேக்கப்புக்காக இளம்பெண்கள் வருவது வழக்கம். இந்நிலையில், மேக் கப் செய்ய வந்த தங்களிடம் அனீஸ் அன்சாரி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சில இளம்பெண்கள் இன்ஸ்டாகிராமில் தகவல் வெளியிட்டனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதையறிந்த அனீஸ் அன்சாரி தலைமறைவானார். போலீசார் விசாரித்தபோது, அவர் துபாய்க்கு தப்பித்துச் சென்றது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அனீஸ் அன்சாரி மேக்கப் செய்ய வரும் இளம்பெண்களின் அனுமதியின்றி, அவர்களுடைய வயிறு உள்பட சில பகுதிகளில் மேக்கப் போடுவது போல் தொடுவது, மசாஜ் செய்வது போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். கொச்சியை சேர்ந்த ஒரு இளம்பெண் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு மேக்கப் போடுவதற்கு சென்றபோது, அவர் அனுமதியின்றி மேலாடையை நீக்கியுள்ளார். தவிர, மலையாள நடிகைகளிடமும் அனீஸ் அன்சாரி சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.