லண்டன்:
உக்ரைனில் குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்டவற்றின் மீதும் ரஷியா நடத்தும் தாக்குதல் தொடர்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் மரியுபோல் நகரின் மீது ரஷிய படைகள் கடும் குண்டுவீச்சு நடத்தின. அப்போது அங்குள்ள ஆஸ்பத்திரியையும் அவை விட்டுவைக்கவில்லை.
இந்த குண்டுவீச்சில், ஒரு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மரியானா விஷேகிர்ஸ்கயா என்ற பெண் காயம் அடைந்து முகத்தில் ரத்தம் தோய்ந்திருந்த நிலையில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதையொட்டிய அவரது படம் சமூக ஊடகங்களில் வெளியாகி மனித குலத்தை உலுக்கியது. இந்தப் பெண் மற்றொரு ஆஸ்பத்திரியில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
போர் முனையில் பூத்த இந்த புத்தம்புதிய மலருக்கு பெற்றோர் வெரோனிகா என பெயர் சூட்டி உள்ளனர்.
இதை துருக்கியில் உள்ள மரியானாவின் மருமகள் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.