இளைஞர்களால் இந்தியாவின் பெருமை விளையாட்டுத் துறையில் மேலும் உயரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேல் கும்பமேளா எனும் விளையாட்டுத் திருவிழாவை அகமதாபாத் நகரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இளைஞர்களால் விளையாட்டுத் துறையில் எதிர்கால இந்தியாவுக்கு அதிகளவில் பதக்கங்கள் கிடைக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா முதன்முறையாக 7 பதக்கங்களை வென்றது ஒரு புதிய தொடக்கம் என்றும் இந்த வெற்றிகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.
அகமதாபாதில் விளையாட்டு மகா கும்பமேளாவைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்திய பிரதமர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் காரணமாக இது போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டார்.
இங்கு திரண்டுள்ள கூட்டமே நமது இளைஞர்கள் வானத்தைத் தொடுவதற்கான சாட்சி என்றும் மோடி கூறினார்.இளைஞர்கள் மீண்டும் உற்சாகம் பொங்க திரண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமருக்கு விளையாட்டு வீரர்கள் மலர்களைப் பரிசளித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து கண்கவரும் கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன
முன்னதாக கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு மாபெரும் பேரணிகளை குஜராத்தில் பிரதமர் மோடி நிகழ்த்தினார். வழிநெடுக ஏராளமானோர் மலர் தூவி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.