காஷ்மீரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் தீவிரவாத அமைப்புளைச் சேர்ந்த4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜய்குமார் நேற்று கூறியதாவது:
காஷ்மீரின் புல்வாமா, கந்தர்பால், ஹந்த்வாரா ஆகிய 3 இடங்களில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் கடந்த 11-ம்தேதி திடீர் சோதனை நடத்தினர். அந்தப் பகுதிகளில் தீவிரவாதிகள் மறைந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக அந்தப் பகுதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு வீரர்களும் போலீஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.
அதேபோல் கந்தர்பால் மற்றும் ஹந்த்வாரா பகுதியில் லஷ்கர் இ தொய்பாவின் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். என் கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பாகிஸ்தானியர் ஜெய்ஷ் கமாண்டர் கமால் பாய் என்கிற ஜாட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு புல்வாமா – ஷோபியான் பகுதியில் தீவிரவாத செயல்களில் அவர் ஈடுபட்டது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு ஐ.ஜி. விஜய்குமார் கூறினார். -பிடிஐ