நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். ராணுவத்தில் பணியாற்றி வரும் இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேமா என்பவரும் கடந்த 2016 முதல் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2018-ல் இரு குடும்பத்தினரும் கூடிப் பேசி இருவரும் இனிமேல் சந்திக்கக் கூடாது என ஒப்பந்தம் செய்துள்ளனர். அதற்கு இருவருமே சம்மதித்துப் பிரிந்திருக்கிறார்கள். அதன் பின்னர் ராணுவ வீரர் மாரியப்பனுக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது.
மாரியப்பனுடன் திருமணம் நடந்த சிறிது காலத்துக்குப் பின்னரே அவருக்கும் பிரேமாவுக்கும் இடையே இருந்த காதல் பற்றிய விவரம் அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்திருக்கிறது. அதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், தன்னை விட்டுப் பிரிந்து சென்ற காதலி பிரேமா கருவுற்றிருப்பதை மாரியப்பன் கேள்விப்பட்டுள்ளார். அதனால் மீண்டும் இருவரும் வீட்டினருக்குத் தெரியாமல் சந்தித்துப் பேசியுள்ளனர். பிரேமாவுடன் மாரியப்பனுக்கு தொடர்ந்து தொடர்பு இருப்பதைத் அறிந்த அவர் மனைவி, கோவப்பட்டு பிறந்து வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதற்கிடையே பிரமாவுக்கு பெண் குழந்தை பிறந்து நேத்ரா ஸ்ரீ எனப் பெயரிடப்பட்டது. ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு வரும்போது மாரியப்பன், பிரேமாவைச் சந்தித்துப் பேசிவந்துள்ளார். இந்த நிலையில், இந்தமுறை விடுமுறைக்கு வந்திருந்த மாரியப்பன், தான் திரும்பிச் செல்லும்போது காதலி பிரேமாவையும் தன்னுடன் டெல்லிக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
மாரியப்பனுடன் டெல்லிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த பிரேமா, அவருடன் திருநெல்வேலிக்குச் சென்று தனக்கும் தன் குழந்தைக்கும் துணிமணிகள் வாங்கியிருக்கிறார். பின்னர் மூவரும் பைக் மூலம் திருக்குறுங்குடி திரும்பியிருக்கிறார்கள். வழியில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
திருக்குறுங்குடி குளத்தின் அருகே வந்தபோது இருவருக்கும் இடையே சண்டை எற்பட்டதால் ஆத்திரமடைந்த மாரியப்பன் பிரேமாவைத் தாக்கியிருக்கிறார். கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த மாரியப்பன், அதே இடத்தில் குழி தோண்டி பிரேமாவை புதைத்துவிட்டு குழந்தையுடன் வீடு திரும்பி விட்டார்.
நடந்த சம்பவத்தை மறக்க முடியாமல் தவித்த மாரியப்பன், மறுநாள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமசந்திரன் என்பவரிடம் சென்று, தான் பிரேமாவை கொன்று புதைத்துவிட்டதாகத் தகவல் சொல்லியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் இது பற்றி திருக்குறுங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டி, பிரேமா உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.பிரேமா உயிரிழந்த நிலையில், ராணுவ வீரர் மாரியப்பன் கைது செய்யப்பட்டு விட்டதால் குழந்தை நேத்ரா ஸ்ரீயை இருவரின் குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அதனால் திருக்குறுங்குடி போலீஸார் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.