அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நாளை தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்கள் ஆகியோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி நாளை இணையவழியில் தொடங்க இருப்பதாகவும், இந்த பயிற்சிக்கான காணொலிகள், செயல்பாடுகள் உள்ளிட்டவை அடங்கிய 12 கட்டங்கள் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு ஆசிரியர் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வலைதளத்தில் சென்று ஆசிரியர்கள் பயிற்சியில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து கட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டும் என்றும், பயிற்சி முடிந்தபின் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.