பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ் மதுரையில் தொழில் செய்து கொண்டிருந்தாலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்படி பிஸியான நிலையிலும், 50 வருடங்களுக்கு முன்பு மதுரை தூய மரியன்னை பள்ளியில் தன்னுடன் 10-ம் வகுப்பு படித்தவர்களை தேடிப்பிடித்து, நண்பர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைத்து விழா நடத்தி அசத்தியுள்ளார்.
புதிய வகை திரைமொழி, காட்சிபடுத்தல், சமூகத்தை பிரதிபலிக்கும் அழுத்தமான கதைகள் மூலம் படங்களை இயக்கி அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். மகனைப்போலவே தந்தை கஜராஜும் தான் நடிக்கும் கதாபாத்திரங்களால் பாராட்டு பெற்றுவருகிறார்.
இந்நிலையில்தான் அவரும் சில நண்பர்களும் சேர்ந்து 1970-ல் 10-ம் வகுப்பு படித்த நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.
அதற்கான பணிகள் துரிதமாக நடந்து சமீபத்தில் மதுரை காலேஜ் ஹவுஸ் மீட்டிங் ஹாலில் 40-க்கும் மேற்பட்டோர் சந்தித்துக்கொண்டனர்.
மருத்துவர், வங்கி அதிகாரி, வழக்கறிஞர், ஆசிரியர், பொறியாளர், தொழிலதிபர், பாதிரியார் என பல துறைகளில், பல ஊர்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கிளம்பி வந்திருந்தனர்.
65 பிளஸ்சில் இருந்தவர்கள், நண்பர்களை பார்த்தவுடன் 15 வயதினராக மாறினார்கள். பள்ளியில் படிக்கும்போதே எப்படி ஒருவரையொருவர் பட்டப்பெயர் வைத்து அழைத்துக்கொண்டார்களோ அதுபோல் இப்போதும் அழைத்தனர். கேலி கிண்டல், அப்போது செய்த சேட்டைகள் என அந்த நாள் அனுபவங்களைப் பேசி மகிழ்ந்தார்கள்.
நம்மிடம் பேசிய சுதாகர், கஜராஜ் உள்ளிட்ட நண்பர்கள், ” எங்களில் சிலர் மட்டும் மதுரையில் வசிப்பதால், அவ்வப்போது சந்தித்துக்கொள்வோம். அப்போதுதான் 10-ம் வகுப்பு படித்து 50 வருடம் ஆகப்போகிறது. நம் நண்பர்கள் எல்லோரும் சந்தித்தால் என்ன என்று யோசித்து இந்த ரீ யூனியனை ஒழுங்கு செய்தோம். கிடைத்த நண்பர்கள் மூலம் மற்ற நண்பர்களை டிரேஸ் செய்து 45 பேரைக் கண்டுபிடித்தோம். ஒருசிலரால் இந்த சந்திப்புக்கு வரமுடியவில்லை.
கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில் கிடைக்கிற நண்பர்களைவிட பள்ளிக்காலத்தில் நம்மோடு பழகிய நண்பர்களே எப்போதும் நினைவில் இருப்பார்கள். அந்த அடிப்படையில்தான் 50 வருடம் நெருங்கப்போவதை அறிந்து ஒவ்வொரு நண்பராகத் தேடிப்பிடித்தோம். மதுரையில் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் எந்தவொரு பாகுபாடுமில்லாமல் கல்வி வழங்கி சமுதாயத்தில் நல்ல மனிதர்களை உருவாக்கியதில் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளிக்கு முக்கிய பங்குண்டு. அதனால்தான் இன்றுவரை எங்களுடன் படித்த நண்பர்களில் யார் என்ன ஜாதி, மதம் என்பது தெரியாது. அதைப்பற்றி நாங்கள் யோசித்ததே கிடையாது. ஆனால், நவீன வளர்ச்சி அதிகரித்துள்ள இந்த காலத்தில் ஜாதி மத பாகுபாடு பள்ளியில் படிக்கிற காலத்திலயே வருவது கவலை அளிக்கிறது” என்றனர்.
மதியம் சேர்ந்து உணவு உண்டவர்கள் பின்பு அவர்கள் படித்த காலத்தில் பணியாற்றிய ஆசிரியர்களை தேடிச்சென்று மரியாதை செய்தார்கள்.
மொத்தத்தில் மதுரையில் நடந்த இந்த சந்திப்பு ஒரு ஜிகர்தண்டா சந்திப்புதான்.