தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஒரு அடி நிலத்துக்காக இரு குடும்பத்தினர் கம்பு கற்களோடு மோதிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் ஆர்.சி.கோவில் தெருவைச் சேர்ந்த விண்ணரசி சுமதி என்பவரின் குடும்பத்துக்கும் ஜேம்ஸ் என்பவரின் குடும்பத்துக்கும் அருகில் உள்ள இடம் தொடர்பாக எல்லை பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை, இந்த பிரச்சனை தொடர்பாக இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் தனது உறவினர்களுடன் சேர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கம்பால் அடித்து தாக்கிக் கொண்டனர்.
கம்புகளால் தாக்கிக் கொண்டவர்கள் அடுத்த கட்டமாக, ஒருவருக்கொருவர் கற்களை வீசி கடுமையாக தாக்கிக் கொண்டனர்
கையில் கோடாரியுடன் தாக்க வந்தவரை நோக்கி அடுத்தடுத்து கற்கள் வந்து விழுந்ததால் அவர்கள் ஓட்டம் எடுத்தனர்
இந்த தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினரும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதில் கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சிகள் வாயிலாக, விண்ணரசி சுமதி மற்றும் ஜேம்ஸ் குடும்பத்தை 16 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், டேனி, செல்வ ராஜேஸ் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரு அடி நிலத்துக்காக பலத்த அடிபட்ட இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும், கமுக்கமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.