பிப்ரவரி 19-ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. திருச்சி மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட முத்துலட்சுமி என்பவர், கருமண்டபம் பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள 647-வது வாக்குச் சாவடிக்கு தனது வாக்கினை செலுத்த வந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், “உங்க ஓட்டு ஏற்கனவே போட்டாச்சே!” எனச் சொல்ல, “நான் இப்ப தானேங்க வரேன். என்னோட ஓட்டை யார் போட்டது!” என முத்துலட்சுமி கேட்க பெரும் பரபரப்பு உண்டானது. உடனே, அந்த வார்டில் போட்டியிட்ட மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் வந்து விசாரணையில் இறங்கினர். அப்போது, 56-வது வார்டு தி.மு.க., வேட்பாளரான மஞ்சுளாதேவிக்கு வாக்குச்சாவடி எண் 646-ல் ஓட்டு இருக்க, அவர் அங்கும் ஓட்டு போட்டுவிட்டு 647-வது வாக்குச் சாவடியிலும் வந்து ஓட்டு போட்டது தெரியவந்தது. அப்போதே தி.மு.க., வேட்பாளர் மஞ்சுளா தேவி 2 ஓட்டு போட்டதாக அவருக்கு எதிராக, மற்ற வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காவல்துறை மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கும் இந்த விவகாரம் குறித்து புகார் கொடுத்தனர்.
தேர்தல் முடிவில் 4,323 வாக்குகள் பெற்று தி.மு.க., வேட்பாளர் மஞ்சுளா தேவி 56-வது வார்டு கவுன்சிலர் ஆனார். இருந்தபோதிலும், கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலரான மஞ்சுளா தேவி மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென அதேவார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான கவிதா என்பவர் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக் கொண்டதோடு, தி.மு.க., கவுன்சிலர் மஞ்சுளா தேவியை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருக்கிறது.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 56-வது வார்டு சுயேச்சை வேட்பாளரான கவிதாவிடம் பேசினோம். “திருச்சி மாநகராட்சியின் 56-வது வார்டு தி.மு.க., கவுன்சிலரான மஞ்சுளா தேவி, தேர்தல் அன்று கருமண்டபம் ஆரம்பப்பள்ளி ஓட்டுச்சாவடி பாகம் எண் 646 மற்றும் 647 ஆகிய இரு வாக்குச் சாவடிகளிலும் வாக்களித்திருக்கிறார். சம்பந்தப்பட்ட அந்த இரண்டு வாக்குச் சாவடியின் ஆவணங்களிலும் மஞ்சுளா தேவி கையெழுத்திட்டு ஓட்டு போட்டது ஆதாரத்துடன் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் 56-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அவரது ஆதரவாளர்கள் மூலம் கள்ள ஓட்டு போட்டே அவர் வெற்றி பெற்றிருக்கிறார். கள்ள ஓட்டு போடுவது மிகப்பெரிய குற்றம். அப்படியிருக்க வேட்பாளரே கள்ள ஓட்டு போட்டதால், மஞ்சுளா தேவியை கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்றார்.
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக கோ-அபிஷேகபுரம் கோட்ட தேர்தல் நடத்தும் உதவி அலுவலர், மாநகராட்சி தேர்தல் அலுவலர் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு 56-வது வார்டு தி.மு.க., கவுன்சிலரான மஞ்சுளா தேவியிடம் பேசினோம். “தேவையில்லாம என் மேல பொய்யான குற்றச்சாட்டை வச்சிருக்காங்க. ஓட்டுப்பதிவு அன்னைக்கு நான் எதார்த்தமா அந்த வாக்குச் சாவடிக்குள்ள போனேன். அங்கிருந்த அதிகாரிகள் தான் என்னை ஓட்டு போடச் சொன்னாங்க. அதனால தான் நான் போட்டேன். மற்றபடி நான் கள்ள ஓட்டு எதுவும் போடலைங்க. அதிகாரிங்க தானே என்னோட ஆவணங்களை வாங்கி சரி பார்த்து ஓட்டு போட விட்ருக்கணும். அதிகாரிகளோட தப்புக்கு நான் என்னங்க பண்ணுவேன்” என்றவரிடம், ‘தவறுதலாக 647-வது வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டுட்டு, உங்க ஓட்டு இருக்க 646-வது வாக்குச் சாவடியிலயும் எதுக்காக ஓட்டு போட்டீங்க. 2 ஓட்டு போட்டது தப்பு இல்லையா!’ என நாம் கேட்க, “சார் நான் ஒரு ஃபங்ஷனுக்கு வந்துருக்கேன். எங்க வீட்ல பேசிட்டு உங்களுக்கு பதில் சொல்றேன்” என பேச்சை முடித்துக் கொண்டார்.