திருச்சி, கீழப்புதூர் குருவிக்காரன் தெருவிலுள்ள சில வீடுகளில், பச்சைக் கிளிகள் விற்பனைக்காக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து வனப் பாதுகாப்புப் படையின் உதவி வனப் பாதுகாவலர் நாகையா தலைமையிலான குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று சோதனையிட்டுள்ளனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட பச்சைக் கிளிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட முனியாஸ் எனச் சொல்லப்படும் குருவிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. அவற்றை வன பாதுகாப்புப் படையினர் மீட்டு, திருச்சி கோர்ட் வளாகத்திலுள்ள வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட பச்சைக் கிளிகள் மற்றும் முனியாஸ் குருவிகளில் பெரும்பாலானவை இன்னும் இறக்கைகள் முளைக்காமல் இருக்கும் குஞ்சுகள். மேலும், கிளிகள் பறந்துவிடக் கூடாது என்பதற்காக பல கிளிகளின் இறக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன.
பறக்கக்கூடிய கிளிகள் மற்றும் குருவிகளை பறக்கவிட்ட வனத்துறையினர், மீதமுள்ளவற்றை கண்காணிப்பில் வைத்து உணவளித்துப் பராமரித்து, அவை நன்கு வளர்ந்த பின்னர் பறக்கவிடப்படும் எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து வனப் பாதுகாப்புப் படையின், உதவி வனப்பாதுகாவலர் என்.வி.நாகையா கூறுகையில், “வன உயிர் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி, பல பறவைகள், விலங்குகள் பாதுகாக்கப்பட்ட வன உயிர்களாகப் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. அந்தப் பட்டியலில், தற்போது மீட்கப்பட்டுள்ள பச்சைக் கிளிகளும், முனியாஸ் குருவிகளும் அடக்கம். இவற்றை பிடிப்பதும், விற்பனை செய்வதும் மட்டுமல்லாமல் வீட்டில் வளர்ப்பதும் கூட குற்றமாகும்.
ஒருசிலர் பணத்திற்காக சட்ட விரோதமாக இவற்றை ஒரு ஜோடி ரூ. 250 வரை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. பொதுமக்கள் பலரும் விழிப்புணர்வு இன்றி வீடுகளில் கிளிகள் போன்ற, பாதுகாக்கப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளை வளர்த்து வருகின்றனர். அது மிகவும் தவறு. இப்படி, பாதுகாக்கப்பட்ட வன உயிர்களை வீடுகளில் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.