பெங்களூரு:
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 252 ரன்களில் ஆல் அவுட்டானது. ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் குவித்தார். விராட் கோலி 23 ரன்கள், ரிஷப் பண்ட் 39 ரன்கள், விஹாரி 31 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்களின் அசத்தலான பந்து வீச்சால் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் மேத்யூஸ் ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்தார்.
முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. டிக்வெலா 13 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மீதமுள்ள விக்கெட்களை பும்ராவும் அஸ்வினும் கைப்பற்றினர்.
இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட, இலங்கை அணி 143 ரன்கள் பின்தங்கி உள்ளது.