காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் தொடங்கியது!

புதுடெல்லி,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி முன்னணி தலைவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கட்சித்தலைமை மீது விமர்சனங்களை வீசத்தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாதி ஒரு மாத இடைவேளைக்குப்பின் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 
பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்  சோனியாகாந்தி இல்லத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ஆனந்த் சர்மா, கே சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் சோனியாகாந்தி இல்லத்திற்கு வந்தனர்.
நாளை நடைபெறும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், உக்ரைனில் இருந்த வந்த மருத்துவ மாணவர்கள், விவசாயிகள் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை எழுப்ப முயற்சிப்போம் என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.  
இதற்கிடையே,  5 மாநில தேர்தல் தோல்வி தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியும், விரக்தியும் அதிகரித்து வரும் நிலையில் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரியக்கமிட்டி கூட்டம் இன்று மாலை கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.