எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கொரானோ தாக்கம் இருந்ததால் அவருடைய திருமணம் மும்பையில் மிகவும் எளிமையாக நடந்தது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் கைவசம் இருந்த படங்களில் உடனடியாக நடித்து முடித்தார் காஜல் அகர்வால். ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதிலிருந்தும் விலகினார். அதற்குப் பின் காஜல் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், சமீபத்தில்தான் அவர் கர்ப்பமாக இருப்பது பற்றி அவருடைய கணவர் கவுதம் தெரிவித்தார்.
அந்த செய்தி வெளியில் வரும் வரையில் பழைய புகைப்படங்களைப் பதிவிட்டு காஜல் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார். இடையில் சில புகைப்படங்களை வெளியிட்டாலும் தனது கர்ப்பமான வயிறு தெரியாத அளவிற்குத்தான் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
கடந்த இரண்டு நாட்களாக வயிறை வெளிப்படையாகக் காட்டி புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். ஒரு படத்தில் கணவருடன், “இதுதான் நாங்கள்” என்றும் மற்றொரு படத்தில் தனது வயிற்றைப் பிடித்தபடி 'எதிர்பார்ப்பு' என்றும் பதிவிட்டுள்ளார். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது 'பிரக்னன்சி போட்டோஷுட்' எடுத்துக் கொள்வது சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. அப்படி எடுக்கப்பட்ட போட்டோஷுட்டிலிருந்து காஜல் இந்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கலாம்.