கொல்கத்தாவில் பிரபல நடிகை ஒருவர் பிக்பாக்கெட் அடித்து மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பிரம்மாண்ட சர்வதேச புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல ஏராளமானோர் புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த சிலர், தங்களின் பர்ஸ்களை காணவில்லை எனக் கூறி பிரச்னை செய்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்து போலீஸார் விசாரணை நடத்தியதில், சுமார் 30 பேரின் பர்ஸ்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புத்தகச் சந்தையின் வாயில் கதவை பூட்டிய போலீலார், அனைவரின் உடைமைகளையும் பரிசோதிக்க தொடங்கினர்.
அப்போது அங்கிருந்த பிரபல சீரியல் நடிகையான ரூப்பா தத்தா, பதட்டத்துடன் குப்பைக் கூடையில் எதையோ போட்டுக் கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அந்தக் குப்பைக் கூடையை சோதித்த போது, அதில் ஏராளமான பர்ஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ரூப்பா தத்தா வைத்திருந்த கைப் பையை வாங்கி போலீஸார் பரிசோதித்ததில், அதிலும் 10-க்கும் மேற்பட்ட பர்ஸ்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடமிருந்து ரூ.65,760 ரொக்கம் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணயில், இது அவரது முதல் திருட்டு அல்ல என்பதும், ஏற்கனவே இதுபோல பல பொது இடங்களில் அவர் பிக்பாக்கெட் அடித்திருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும், எந்தெந்த இடங்களில் எவ்வளவு திருடினோம் என்பதை குறித்து வைக்க, டைரி ஒன்றை தான் பராமரித்து வருவதாகவும் ரூப்பா தத்தா கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். அவர் தற்போது கைது செய்யப்பட்டு வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM