திருப்பதி:
திருப்பதி வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 41). இவர் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்து வந்தார். இவரது கணவர் ஸ்ரீதர் ரெட்டி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு ஷியாம் கிஷோர் (10) என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீதர் ரெட்டியை பிரிந்து ராஜலட்சுமி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். ராஜலட்சுமி கர்நாடக மாநிலம் பெல்காமில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் முடித்தார். கடந்த 9-ந் தேதி பட்டமளிப்பு விழா நடந்தது. பெல்காமில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ராஜலட்சுமி ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருந்தார்.
கடந்த 8ஆம் தேதி தனது தம்பி துர்கா பிரசாத் இவருக்கு போன் செய்த ராஜலட்சுமி நாளை பெல்காம் செல்வதாகவும், தனக்கு தலைவலி அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு கல்லூரிக்கு விடுப்பு எடுத்து வீட்டில் ஓய்வு எடுக்க உள்ளதாகவும், அப்படியும் தலைவலி சரியாகவில்லை என்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தநிலையில் 8-ந் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு படுக்கையறைக்கு சென்று ராஜலட்சுமி படுக்கையிலிருந்து திடீரென கீழே விழுந்து இறந்துள்ளார். இதனைக் கண்ட ஷியாம் கிஷோர் தாய் உறங்குவதாகவும், அவரை எழுப்பி தொந்தரவு செய்யக்கூடாது என நினைத்துள்ளார். பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பிஸ்கட், கேக், பழம் உள்ளிட்டவைகளை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று ராஜலட்சுமி உடல் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் அச்சமடைந்த ஷியாம் கிஷோர் இதுகுறித்து தனது தாய்மாமா துர்கா பிரசாத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் ராஜலட்சுமியின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ராஜலட்சுமி இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.
இத்தனை நாட்களாக ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என ஷியாம் கிஷோரிடம் கேட்டபோது, தாய் தூங்குவதாகவும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என நினைத்து யாரிடமும் சொல்லவில்லை என தெரிவித்தார்.
இதுகுறித்து துர்கா பிரசாத் திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜலட்சுமி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தது கூட தெரியாமல் உறங்குவதாக நினைத்து சிறுவன் பள்ளிக்கு சென்று வந்த சம்பவம் திருப்பதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.