மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழாவில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டி கிராமத்தில் உள்ள சாவட்டான் கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விவசாயம் செழிக்க மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம், இந்நிலையில், இன்று மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிலையில், மீன்களை பிடிப்பதற்காக நள்ளிரவு முதலே ஏராளமான பொதுமக்கள் கண்மாய் கரையில் காத்திருந்தனர். இதையடுத்து அதிகாலையில் கிராம பெரியவர்கள் வெள்ளை துண்டை வீசியவுடன் ஒற்றுமையாக ஒரு சேர நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.
இதில், நாட்டு வகை மீன்களான கட்லா, ரோகு, ஜிலேபி கட்லா உள்ளிட்ட ஏராளமான மீன்கள் வலையில் சிக்கியது. மீன்களை பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். பிடிக்கப்பட்ட மீன்களை சமைத்து இறைவனுக்குப் படைத்த பிறகு சாப்பிடுவர். இதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM