தாம்வரம் வரதராஜபுரம் தெட்சணமாற நாடார் சங்க மஹால் திறப்புவிழாவில் தந்தி தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
எனது அண்ணன் சிவந்தி ஆதித்தனார், அப்பா சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் இருவரும் இந்த விழாவுக்கு வருவதற்கு மிகவும் விருப்பப்பட்டார்கள். ஆனால் அவர்கள் சார்பில் நான் இங்கு வந்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
தினத்தந்தி குடும்பத்தில் இருந்து இங்கு வந்திருப்பதை நான் முக்கியமாக கருதுகிறேன். ரொம்ப சந்தோசமாக உள்ளது.
விழா மேடையில் பேசிய அண்ணாச்சி, எனது தாத்தா டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பற்றி மிகவும் பெருமையாக பேசினார். அவர் பேசியதை கேட்டபோது எனக்கு ஒரு யோசனைதான் வந்தது.
நான் சிறுவனாக இருந்தபோது திருச்செந்தூர் கோவிலுக்கு தாத்தாவுடன் சென்றிருந்தேன். அங்கு கோவில் மணி ஒன்று இருந்தது. அது எனக்கு எட்டவில்லை. அப்போது நான் மிகவும் சிறுவனாக இருந்தேன். உடனே தாத்தா என்னை அவர்களது தோளில் என்னை ஏற்றி மணியை அடிக்க வைத்தார்.
அன்றுதான் நான் ஒரு முடிவு செய்தேன். எங்கள் ஊர் இந்த ஊர் தான். இங்கு தான் நாங்கள் வந்து வேலை செய்ய வேண்டியுள்ளது என்று எண்ணினேன்.
நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் நான் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தை திரும்ப தொடங்கி வைத்துள்ளேன்.
அதன் மூலமாக நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாதி, மதத்தை மறந்துவிட்டு செயல்பட வேண்டும். எனது தாத்தா ஆசைப்பட்ட விஷன் (தொலைநோக்கு பார்வை) மற்றும் அவரது கனவுகள் எல்லாவற்றையும் நாம் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
உங்கள் அனைவரையும் இங்கு பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
இவ்வாறு பா.ஆதவன் ஆதித்தன் பேசினார்.