கோல்கட்டா: போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கி தவித்த 800 மாணவர்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் 6 விமானங்களை இயக்கி மீட்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார் 24 வயதே ஆன பெண் பைலட் மகாஸ்வேதா சக்ரவர்த்தி. அவரது பணியை சமூக ஊடகங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் அங்கு மருத்துவம் படிக்கச் சென்றவர்கள், பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை போலந்து, ஹங்கேரி ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து இந்தியா மீட்கிறது. இதற்காக பிப்ரவரி 24 அன்று ஆபரேஷன் கங்கா என்ற திட்டம் தொடங்கப்பட்டு 3வது வாரமாக தொடர்கிறது. இதுவரை சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் தமிழக மாணவர்களும் அடக்கம்.
ஆபரேஷன் கங்கா திட்டத்தில் கோல்கட்டாவைச் சேர்ந்த மகாஸ்வேதா சக்ரவர்த்தி என்ற 24 வயதாகும் பெண் பைலட் முக்கியப் பங்காற்றியுள்ளது தற்போது கவனத்திற்கு வந்துள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார். பிப்ரவரி 27 முதல் மார்ச் 7 வரை உக்ரைன் எல்லை நாடுகளுக்கு 6 விமானங்களை இயக்கி சுமார் 800 மாணவர்களை மீட்க உதவியுள்ளார். இது தனது வாழ்நாள் அனுபவம் என பேட்டி தந்துள்ளார். ஒரு நாளைக்கு 13 – 14 மணிநேரம் ஏர்பஸ் ஏ320 விமானத்தில் பறக்க வேண்டியிருந்ததாகவும் பயத்துடன் வீட்டிற்கு எப்போது செல்வோம் என்ற விரக்தியில் இருந்த மாணவர்களை பார்த்த போது அது தனக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை என கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அமேதியில் உள்ள விமானிகளுக்கான பயிற்சி நிறுவனமான இந்திரா காந்தி ராஷ்டிரிய உரான் அகாடமியில் மகாஸ்வேதா பட்டம் பெற்றவர். பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் திட்டமான வந்தே பாரத் திட்டத்திலும் இவரது பங்களிப்பு இருந்தது. 2ம் அலையின் போது ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வந்துள்ளார். தடுப்பூசிகளை புனேவிலிருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விமானம் மூலம் கொண்டு சென்றுள்ளார்.
Advertisement