டைம் டிராவல் செய்து காணாமல்போன தன் மனைவியைத் தேடி தன்னுடைய இறந்த காலத்துக்குச் செல்லும் நாயகன், தன் 12 வயது வெர்ஷனுடன் இணைந்து செய்யும் சாகசங்கள்தான் இந்த ‘தி ஆடம் பிராஜக்ட்’.
டைம் டிராவல் என்பது சாதாரணமாகிவிட்ட 2050 காலகட்டத்திலிருந்து இறந்த காலத்துக்குப் பயணம் செய்கிறார் ஆடம் ரீட். அவருக்கு முன்னரே 2018-க்குப் பயணப்பட்டு இன்னமும் திரும்பிடாத அவரின் மனைவியைத் தேடி, விதிகளை மீறியே இந்தக் காலப்பயணத்தை அவர் செய்கிறார். ஆனால், தவறுதலாக, 2018-க்கு பதில் 2022-ல் அவர் தரையிறங்கிவிட, ஆபத்துகள் அவரைச் சூழ்கின்றன. அங்கே இருக்கும் தன் 12 வயது வெர்ஷனான ஆடமுடன் இணைந்து இந்த 40 வயது ஆடம் சிக்கல்களைக் களைந்து சாதித்தாரா என்பதுதான் நெர்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் சாகசப் படத்தின் கதை.
ஆடமாக ரியான் ரெனால்ட்ஸ். வழக்கம்போல நிஜ ரியான் ரெனால்ட்ஸாகவே திரையில் அதகளம் செய்தியிருக்கிறார். சமீபமாக ‘டெட்பூல்’ தொடங்கி எந்தப் பாத்திரம் என்றாலும் அதில் ரியான் மட்டுமே தனித்துத் தெரிவார் என்பது தெரிந்ததே! ஆனால், இந்தப் போக்கு இந்தக் கதைக்கும் பொருந்திப் போகிறது என்பது கூடுதல் ப்ளஸ். வழக்கமான கேலி, கிண்டல்கள் தாண்டி, அவரின் தந்தையாக மார்க் ரஃபலோவுடனான காட்சிகளில் எமோஷனாகவும் கலங்க வைத்திருக்கிறார். இளம் வயது ஆடம் ரீடாக 12 வயது சிறுவனாக வாக்கர் ஸ்கோபெல் அசத்தலானதொரு பர்ஃபாமென்ஸைக் கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட ரியானின் சிறுவயது பிரதிபலிப்பாக அவர் செய்யும் அழிச்சாட்டியங்கள் கலகலப்பு. அதே சமயம், தன் அம்மா மற்றும் அப்பாவுடன் அவர் பேசும் இறுதி காட்சிகள் நெகிழ்ச்சி!
‘ஹல்க்’ புகழ் மார்க் ரஃபலோவுக்குக் கிட்டத்தட்ட அதே போல ஒரு விஞ்ஞானி கதாபாத்திரம். பாதி படமே வந்தாலும் இருவேறு காலத்தைச் சேர்ந்த தன் மகன்களுடன் அவர் முதன் முதலில் உரையாடும் அந்தக் காட்சி சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டிருக்கும் வசனங்கள், அந்தக் காட்சியமைப்பு என எல்லாம் கூடிவர, மார்க்கின் நடிப்பும் மிக முக்கியமான காரணம்.
அதேபோல், ரியான் ரெனால்ட்ஸுடன் மல்லுக்கு நிற்கும் காட்சிகளிலும் தன் தனி முத்திரையைப் பதிக்கிறார் மார்க் ரஃபலோ. ஆடமின் அம்மாவாக வரும் ஜெனிஃபர் கார்னர், ஆடமின் மனைவியாக சில காட்சிகளே வரும் ஜோயி சல்டானா, படத்தின் வில்லியாக வரும் சீனியர் நடிகை கேத்ரீன் கீனர் ஆகியோர் தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கின்றனர். ஜெனிஃபர் கார்னர், ஜோயி சல்டானா இருவரும் நெகிழ்ச்சியை உண்டாக்க, கேத்ரீன் கீனர் வெறுப்பை வரவைக்கிறார். மொத்தத்தில், அவர்களின் கதாபாத்திர வரைவு சொல்லும் பணியைத் திறம்பட செய்திருக்கின்றனர்.
எதிர்காலம், நிகழ்காலம், இறந்த காலம், காலப்பயணம், தன் இளவயதுடன் உரையாடல் என்று சயின்ஸ் ஃபிக்ஷன் கலவையாக இருந்தாலும் ‘அதிகம் விளக்குகிறேன்’ என்று குழப்ப ரூட் எடுக்காமல் கதைக்குத் தேவையானதை மட்டும் எளிமையாக விளக்கியிருக்கிறார் இயக்குநர் ஷான் லெவி. முக்கியமாக காலமாற்றம், டைம் டிராவல் குறித்தான நினைவுகள் போன்ற சிக்கலான விஷயங்களை 12 வயது சிறுவனுடான வசனங்கள் மூலமாக எளிமைப்படுத்தியது சிறப்பு.
‘பிங்க் பேந்தர்’, ‘நைட் அட் தி மியூசியம்’ படத்தொடர், ‘ரியல் ஸ்டீல்’, ‘தி இன்டர்ன்ஷிப்’ போன்ற படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் ஷான் லெவி, ரியான் ரெனால்ட்ஸுடன் இணைந்து இதற்கு முன்னர் ‘ஃப்ரி கை’ படத்தைக் கொடுத்தார். அவர்கள் இணையும் இரண்டாவது படமான இது, முதல் படத்தின் அளவுக்கு அட்டகாசமானதொரு சாகசப் படமாக இல்லாவிட்டாலும் ஒரு ஃபீல்குட் சயின்ஸ் ஃபிக்ஷன் சினிமா என்ற அளவில் ஈர்க்கிறது. இதே கூட்டணிதான் அடுத்து மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘டெட்பூல் 3’ படத்தையும் இயக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இத்தனை ப்ளஸ்கள் இருந்தாலும், டைம் டிராவல் ரீதியாக ஆங்காங்கே சில குழப்பங்கள் எட்டிப் பார்க்கவே செய்கின்றன. குறிப்பாக க்ளைமேக்ஸில் அனைத்து கதாபாத்திரங்களுக்குமான முடிவுகளை இன்னமும் கொஞ்சம் தெளிவாக விளக்கிக் காட்சிப்படுத்தி இருக்கலாம்.
எதிர்காலத்தில் வில்லியின் கட்டுப்பாட்டில்தான் உலகமே இருக்கிறது, அது முற்றிலுமே கைவிட்டுப் போகப்போகிறது என்ற தருணத்திலும் வெறும் 10 படைவீரர்கள், ஒரு தலைமை வீரன், ஒரு ஸ்பேஸ் ஷிப் என்கிற ரீதியில் வந்து மட்டுமே சண்டையிடுகிறார் அவர். தன் அரியணையே போய்விடும், தன் கனவுகள் அனைத்தும் களைந்துவிடும் என்னும் தருணத்தில்கூட ஒரு சர்வாதிகாரி சிறிய டீமை வைத்து மட்டுமே சண்டை செய்வது என்ன லாஜிக்கோ! லோ பட்ஜெட்னாலும் ஒரு நியாயம் வேணாங்கலா?!
சண்டைக் காட்சிகளில் அனல் பறந்தாலும், லைட் சேபர், சூட் உள்படப் பல விஷயங்களை வெவ்வேறு ஐகானிக் படங்களிலிருந்து இரவல் வாங்கியது போன்ற உணர்வு. இதனாலேயே கதையைத் தவிர ஒரு புதிய உலகிற்கான மெனக்கெடல்கள் எதுவும் இல்லையோ என்று தோன்றுகிறது.
இருந்தும் ஓடிடி-யில் ஜாலியாக குடும்பமாக, முக்கியமாகக் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்க ஒரு பக்கா என்டர்டெயினர் இந்த ‘தி ஆடம் ப்ராஜக்ட்’.