ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் புதிதாக திறக்கப்பட்ட எதிர்கால மியூசியத்தில் கூட்டம் அலை மோதுகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம், கடந்த மாதம் 23-ஆம் தேதி இந்த மியூசியத்தை திறந்து வைத்தார்.
இந்த மியூசியத்துக்கு செல்பவர்கள் 2071ஆம் ஆண்டுக்கு பயணிப்பது போன்ற அனுபவத்தை பெறுகின்றனர். ஐக்கிய அரபு அமீரகம் 1971ஆம் ஆண்டு உருவானது. அதன் நூற்றாண்டு விழா 2071 இல் கொண்டாடப்படவுள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இதுபோன்ற மியூசியம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பான கட்டிட வடிவமைப்பு
7 அடுக்கு மாடி, தூண்கள் இல்லாத அமைப்பு என வித்தியாசமான மியூசியமாக அசத்துகிறது. மொத்தம் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டிடக் கலை ரீதியாக, அதன் வெளிப்புற அமைப்பில் கூர்மையான மூலைகள் இல்லாமல், 77 மீட்டர் உயரம் வரை உயர்ந்து நிற்கும் உலகின் மிகவும் சிறப்பான கட்டிடங்களில் ஒன்றாகும்.
கட்டடத்தின் முகப்பு துரு பிடிக்காத உலோகமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஊக்குவிக்கும் மேற்கோள்களும் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளன.
இந்த எழுத்தை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மட்டர் பின் லஹேஜ் வடிவமைத்தார். மியூசியத்தை கட்டடக் கலை நிபுணர் ஷான் கில்லா வடிவமைத்தார்.
துபாய் ஃபியூச்சர் ஃபவுண்டேஷன் அமைப்பு இந்த மியூசியத்தை நிர்வகிக்கிறது. சோலார் பேனல்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உற்பத்தி செய்யப்படும் 4,000 மெகாவாட் மின்சாரம் அதன் தேவையை பூர்த்தி செய்கிறது.
எதிர்காலத்துக்கான நுழைவாயில்
இது புதுமையான பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இருக்கிறது. மெய்நிகர் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியிருக்கிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு, மனித-எந்திர உரையாடல் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது.
எதிர்காலம், வாழ்க்கை, பூமி, மனிதத்தன்மை, நகரங்கள், சமூகங்கள் , விண்வெளி உள்ளிட்டவை தொடர்பாக கேட்கும் கேள்விகளுக்கு இத்தகைய தொழில்நுட்பங்கள் பதிலளிக்கின்றன.
சுகாதாரம், கல்வி, ஸ்மார்ட் நகரங்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான கண்டுபிடிப்பு ஆய்வகங்கள், எதிர்கால கண்டுபிடிப்புகளின் நிரந்தர மியூசியம் மற்றும் புதிய யோசனைகளை உருவாக்க மற்றும் சோதிக்க ஆய்வகங்கள் ஆகியவையும் உள்ளடக்கி இருக்கிறது இந்த மியூசியம்.
போருக்கு நடுவே வயலின் வாசித்த பெண்.. இன்ஸ்டாகிராம் சேவையை முடக்கிய நாடு.. மேலும் செய்திகள்
மரபணு மாதிரிகள், மரபியல் ஆகியவை குறித்தும் மியூசியத்தின் ஒரு மாடியில் இடமளிக்கப்பட்டுள்ளது.
இது நிஜமாகவே மியூசியமா?
மியூசியம் என்பது வழக்கமாக வரலாறு, கலை அல்லது கலாசார ஆர்வமுள்ள பொருள்கள் காட்சிப்படுத்தப்படும் இடமாகவும் பாதுகாக்கப்படும் அல்லது ஆய்வு செய்யப்படும் இடமாகவும் இருக்கும்.
ஆனால், மியூசியம் ஆஃப் ஃபியூச்சர் முன்னணி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை மேலும் வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆய்வகமாகும்.
இந்த மியூசியத்தில் உள்ளடக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப செழுமைப்படுத்தப்படும் என்பதால் இது நிகழ்கால மியூசியமாகவே கருத வேண்டும்!
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“