பாதுகாப்புத்துறையில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்றும், உக்ரைன்-ரஷ்யா போர் சூழலில் இந்தியாவில் பாதுகாப்பு தயார் நிலை எப்படி இருக்க வேண்டும் என்றும் இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்திருக்கிறார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய போர் 19-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அதன் தாக்கம் இந்திய பாதுகாப்பில் எதிரொலிக்கபடுமா என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய பாதுகாப்பின் தயார் நிலை மற்றும் உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் உலகளாவிய சூழ்நிலையை மதிப்பாய்வு செய்ய உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹரிஷ் ஸ்ரிங்கிளா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகள் கடல் மற்றும் வான் வெளியிலும் இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலையின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பாதுகாப்புத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான ஆபரேஷன் கங்காவின் தற்போதைய நிலவரம் மற்றும் உக்ரைனின் சமீபத்திய முன்னேற்றம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். கூட்டத்தில் பேசிய பிரதமர், பாதுகாப்பு துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச்செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “பாதுகாப்புத்துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவது நமது பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும். அதே நேரத்தில் உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் போரின்போது உயிரிழந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பாவின் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர தேவையான அனைத்து முயற்சிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM