புதுடெல்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் தோல்வி, ஜி-23 அதிருப்தி தலைவர்கள் விவகாரத்திற்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று மாலை அவசரமாக கூடுகிறது. அப்போது கட்சியின் தலைமை மாற்றம், உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதற்கிடையே சோனியா, ராகுல், பிரியங்காவின் முடிவு என்ன? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. பஞ்சாப் தோல்விக்கு காரணம், அம்மாநில முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கை கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியது, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றது, மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்தது ஆகிய விவகாரங்களை கூறுகின்றனர். அதுவும் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய சில மாதங்களில் அடுத்தத்த திருப்பங்களால் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் குழப்பங்கள் நீடித்தன. அதுவே தேர்தலில் எதிரொலித்தது. பஞ்சாப் தோல்வியை தொடர்ந்து தற்போது சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய இருமாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் கட்சித் தலைவராக இருந்த ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவர் நியமனம் செய்யப்பட வில்லை. மாறாக இடைக்கால தலைவராக சோனியா காந்தி தற்போதுவரை பதவியில் உள்ளார். காங்கிரஸ் பொதுச் ெசயலாளரான பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச தேர்தலில் தீவிரமாக பணியாற்றியும் அங்கும் எடுபடவில்லை. அதனால், சோனியா, ராகுல், பிரியங்கா குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் பல்வேறு கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதுவும் ஏற்கனவே கட்சிக்கு முழு நேரத் தலைவர் தேவை என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 அதிருப்தி தலைவர்கள், 5 மாநில தேர்தல் தோல்வியால் மீண்டும் தங்களது குரல்களை உயர்த்தி வருகின்றனர். தேர்தல் முடிவு வெளியாக மூன்று நாட்கள் ஆன நிலையில், இன்று மாலை 4 மணியளவில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அவசர காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், 5 மாநில தேர்தலில் தோல்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய கருத்து குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. தேநேரம் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போன்றோர் மம்தாவுக்கு எதிராக பேசிவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் 5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலியாக ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இருப்பினும், இதற்கு காங்கிரஸ் தரப்பில் தற்போது மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான தலைவர்கள் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் வரும் செப்டம்பரில் உட்கட்சி தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே தேர்தலை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. கட்சியின் மூத்த தலைவரும், ஜி23 தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் இல்லத்தில் அவரை சில தலைவர்கள் சந்தித்ததை தொடர்ந்து தற்போது ெசயற்குழு கூட்டம் அவசர அவசரமாக கூட்டப்பட்டுள்ளதால், ஜி23 தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு சோனியா காந்தி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாளை (மார்ச் 14) தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ஆனந்த் சர்மா, கே.சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.