பெங்களூரு:
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 252 ரன்களும், இலங்கை 109 ரன்களும் எடுத்திருந்தன. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிவேகமாக அரைசதம் கடந்தார். 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். இதன்மூலம் கபில் தேவின் 40 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக அரை சதம் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை கபில் தேவ் பெற்றிருந்தார். 1982ம் ஆண்டு டிசம்பர் மாதம் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, கபில் தேவ் 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். தற்போது அதைவிட குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்து, கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார் ரிஷப் பண்ட்.