உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு தரவில்லை என்று ஆத்திரத்தால் ரயிலில் ஏற்றும் போது இந்திய மாணவர்களை உக்ரைன் போலீஸார் துப்பாக்கியால் சுட்டு மிரட்டியும், லத்தியால் அடித்து துன்புறுத்தியதாகவும் தமிழகம் திரும்பிய வேதனையுடன் தெரிவித்தார்.
ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், மேற்படிப்பிற்காக உக்ரைன் நாட்டிற்குச் சென்ற இந்திய மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் ஊர் திரும்பி வருகின்றனர். அந்த வகையில், மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் நாட்டிற்குச் சென்ற காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த மாணவர் சந்துரு நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டிற்கு வந்தடைந்தார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா நேரில் சென்று அந்த மாணவரைச் சந்தித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து கூறினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் சந்துரு, “இந்திய மாணவர்களை ரயிலில் ஏறும்போது உக்ரைன் போலீஸ் மற்றும் ரயில்வே அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தினார்கள். இந்தியா உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று சொல்லிச் சொல்லி அடித்தார்கள்.
உயிர்ப்பயத்தால் ரயிலில் கூட்டமாக ஏறச் சென்றபோது, உக்ரைன் போலீஸார் வானத்தை நோக்கியும், தரையிலும் துப்பாக்கியால் சுட்டு மிரட்டினார்கள். ரயில் அதிகாரிகளும் `உங்கள் இங்கேயே கொல்லனும்’னு திட்டிக்கிட்டே இருந்தார்கள். எல்லைத்தாண்டி வரும்வரை என்ன நடக்குமோ என்ற உயிர்ப் பயத்தில்தான் இருந்தோம்” என்றார்.