ஆமதாபாத்;வெளிநாடுகள் மட்டுமின்றி, உள்நாட்டிலும் இந்தியா குறித்து தவறான புரிதலை பரப்பும் முயற்சியை முறியடிப்பதற்காக, ஆய்வாளர்கள், எழுத்தாளர்களுடன் இணைந்து, உண்மை தகவல்களின் அடிப்படையில், இந்தியா குறித்த விரிவான புத்தகத்தை தயாரித்து வெளியிட, ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும், அகில பாரதிய பிரதிநிதி சபா உறுப்பினர்களின் உயர்நிலைக் கூட்டம், குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்தது.
வரும் 2025ல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் உட்பட, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி தத்தாத்ரேயா ஹோசபலே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தின் இருந்து இன்று வரையில், நம் தேசம் குறித்து தவறான ஒரு பிம்பத்தை உருவாக்கும் முயற்சிகள், அறியாமையினாலோ அல்லது வேண்டுமென்றோ நிகழ்த்தப்படுகிறது. உள்நாட்டிலும் இதுபோன்ற தவறான புரிதல்கள் பரப்பப்படுகின்றன. இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.
இந்தியா மற்றும் ஹிந்து சமூகம் குறித்தும், அதன் வரலாறு, கலாசாரம், வாழ்வியல் முறை குறித்தும், உண்மையான பிம்பத்தை இந்த உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
நம் தேசம் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்த அறிஞர்கள், புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ளனர்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இல்லாத பலரும், இந்த மகத்தான பணியை செய்துள்ளனர். அவர்களுடன் இணைந்து, இந்தியா குறித்த உண்மை தகவல்களின் அடிப்படையில், விரிவான பிரமாண்ட புத்தகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement