பாஜக ஆளும் மத்தய பிரதேசத்தில் மதுக்கடை ஒன்றினை அக்கட்சியின் முன்னாள் எம்.பி. உமாபாரதி அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர், மக்களவை உறுப்பினர், மத்திய அமைச்சர், பாஜக துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் உமாபாரதி. தற்போது இவர் எந்தப் பதவியிலும் இல்லை. எனினும், தொடர்ந்து அவர் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, தனது சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் அவர் அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகிறார். மேலும் இதற்காக பல போராட்டங்கள், பேரணிகளையும் அவர் நடத்தி வந்தார். இந்த சூழலில், வரும் 15-ம் தேதிக்குள் மத்திய பிரதேசத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கெடு விதித்திருந்தார். ஆனால், அவரது பேச்சுக்கு மாநில அரசு செவிசாய்க்கவில்லை. அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு மதுபானங்களுக்கான வரியையும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு கணிசமாக குறைத்தது.
அரசின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த உமாபாரதி, போபாலில் உள்ள ஒரு மதுக்கடைக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று அங்கிருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார். அதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “நாளை முதல் மதுவுக்கு எதிரான எனது போராட்டத்தை தொடங்கவுள்ளேன்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM