திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலுமிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மூலம் வருகின்றனர்.
திருமலைக்கு இறைச்சி, மது, பீடி, சிகரெட், போதைப்பொருட்கள் உள்ளிட்ட எடுத்து செல்ல அனுமதி இல்லை. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் அலிபிரி சோதனைச்சாவடியில் பக்தர்களின் உடமைகள் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்னர் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்களில் பக்தர்களின் உடமைகளை சோதனை செய்து இயக்குவதால் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானம் பாஸ்டேக் முறையை அமல்படுத்த முடிவு செய்தது. அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தயாரிக்கப்பட்ட பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டிய 300 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
இந்த நிலையில் திருமலைக்கு வரும் வாகனங்களை சோதனை செய்யாமல் பாஸ்டேக் மூலம் அனுமதிக்கப்பட்டால் தேவஸ்தானத்தால் தடை செய்யப்பட்ட பொருட்கள் சுலபமாக திருமலைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்பல் உற்சவம் இன்று இரவு தொடங்கி 17-ந் தேதி வரை 5 நாட்கள் மிகக் கோலாகலமாக நடைபெற உள்ளது. தெப்பல் உற்சவத்திற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தெப்பல் உற்சவம் நடைபெற உள்ள தீர்த்தவாரி குளம் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தெப்பல் உற்சவம் நடைபெறவில்லை. தொற்று பரவல் குறைந்ததால் இந்த ஆண்டு தெப்பல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.