உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட பாஜக எம்எல்ஏ.க்களில் 81 சதவிகிதத்தினருக்கு வெற்றி கிடைத்துள்ளது.
உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக மட்டும் 250 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த முறை 150 முதல் 170 எம்எல்ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்படும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டிருந்தது.
104 எம்எல்ஏ.க்களுக்கு…
அதனால் உ.பி. அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட 3 பேர் பாஜக.வில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இதனால், கடைசி நேரத்தில் தனது திட்டத்தை மாற்றிய பாஜக, 104 எம்எல்ஏ.க்களுக்கு மட்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை.
மீதம் உள்ள 204 எம்எல்ஏ.க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களில் 170 பேர் வெற்றி பெற்றுள்ளனர். உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, 9 மாநில அமைச்சர்களுடன் சங்கீத் சோம் போன்ற முக்கியத் தலைவர்கள் தோல்வி அடைந்தனர்.
கவுசாம்பி மாவட்டத்தின் சிராத்து தொகுதியில் துணைமுதல்வர் மவுரியா, சமாஜ்வாதியின் கூட்டணியான அப்னா தளம் (கர்வாத்) கட்சி வேட்பாளர் பல்லவிபட்டேலிடம் தோல்வி அடைந்தார். இவர் பாஜக கூட்டணித் தலைவர் மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேலின் சகோதரி.
பாஜக.வில் 104 எம்எல்ஏ.க்களுக்குப் பதிலாக போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களில் 80 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது 70 சதவீகிதமாகும்.
கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர்களில் 16 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. இவர்களில் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர, பாஜக.வால் முதல் முறையாக போட்டியிடும் வாய்ப்பை பெற்ற 69 வேட்பாளர்களில் 19 பேருக்கு வெற்றி கிடைத்துள்ளது.
பாஜக கூட்டணிக் கட்சிகள் கடந்த 2017 தேர்தலை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளை பெற்றுள்ளன. அப்னா தளம் போட்டியிட்ட 17 தொகுதிகளில் 12, நிஷாத் கட்சிக்கு 15 தொகுதிகளில் 11 தொகுதிகளும் கிடைத்துள்ளன.
கடந்த 2017 தேர்தலில் மத்திய இணை அமைச்சரான அனுப்பிரியா பட்டேலின் அப்னா தளம் 11-ல் 5, ராஜ்பரின் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 9-ல் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன. இந்த முறை ராஜ்பர், அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதியுடன் இணைந்தார். அதில் 11 தொகுதிகளில் போட்டியிட்டு 6-ல் வென்றுள்ளார். இவருக்கு பதிலாக மீனவர் சமூகத்தின் நிஷாத் கட்சி, பாஜகவுடன் புதிய கூட்டணி வைத்துபோட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.