புதுடெல்லி: மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் அந்நாட்டு ராணுவம் அடக்குமுறையில் ஈடுபட்டது. இதனால் ஏராளமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். இவர்கள் இந்தியாவுக்குள்ளும் சட்டவிரோதமாக ஊடுருவுவதாகவும் இதற்கு ஒரு சிலர் துணை புரிவதாகவும் புகார் எழுந்தது.
குறிப்பாக அசாம், மிசோரம், மேகாலயா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லை வழியாக போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்தது.
இதன் அடிப்படையில் அசாம், மேகாலயா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது கும்கும் அகமது சவுத்ரி உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கும்கும் அகமது சவுத்ரி என்பவர் இந்த செயலுக்கு மூளையாக செயல்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இவர் பெங்களூருவிலிருந்து செயல்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. -பிடிஐ