அரகண்டநல்லூரில் சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாக்கு தீயில் எரிந்து சேதமடைந்தன.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காமராஜர் வீதியில், காமராஜ் (60) என்பவருக்குச் சொந்தமான சாக்கு குடோன் உள்ளது.. இங்கு சணல் சாக்கு மற்றும் பிளாஸ்டிக் சாக்குகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடோன் மூடப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து புகை வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் திருக்கோவிலூர் தீயணைப்புத் துறையினருக்கும், அரகண்டநல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சாக்கு குடோன் முழுவதிலும் தீ பரவியதால், வேட்டவலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்த 2 தீயணைப்பு வாகனங்களும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில், குடோனில் இருந்த ஒரு பகுதி சாக்குகள் மீட்கப்பட்ட நிலையில் மற்றவை தீயில் எரிந்து சேதமானது. இந்நிலையில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சாக்கு குடோன் தீப்பற்றி எரிந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM