நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது. இரு அவைகளும் வழக்கமான அலுவல்களைத் தொடங்கியுள்ளன.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 11 அன்று நிறைவடைந்த நிலையில், ஒருமாத இடைவெளிக்குப் பின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது. குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கைய நாயுடு தலைமையில் மாநிலங்களவைக் கூட்டம் தொடங்கியது. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவையின் அலுவல்கள் தொடங்கின.
ஜம்மு காஷ்மீருக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார். உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக பட்ஜெட் தாள்கள் மூட்டைகளில் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டன.
திரிபுரா மாநிலத்தில் சில சாதிகளைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தை மக்களவையில் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா கொண்டுவர உள்ளார்.
உக்ரைன் போர், அங்கிருந்து இந்தியர்களை மீட்டது ஆகியன குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இரு அவைகளிலும் விளக்கமளிக்க உள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 8ஆம் நாள் வரை நடைபெறும்.