புதுடெல்லி:
மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு தனது மனைவிக்கு பெண்மை இல்லை என்றும், அவர் ஒரு பெண் அல்ல என்றும் அவருக்கு தெரிய வந்தது.
மருத்துவ பரிசோதனை மூலம் இது கண்டறியப்பட்டது. அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் கர்ப்பம் தரிப்பது சாத்தியமற்றது என்று டாக்டர்கள் மூலம் அவர் அறிந்தார்.
இதைத்தொடர்ந்து தனது மனைவியை அழைத்து செல்லுமாறு அவரது தந்தையிடம் அவர் கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை. அதோடு அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இதற்கிடையே தனது மனைவி பெண் அல்ல என்றும், இதனால் தனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும் என்று கோரி அவர் மத்திய பிரதேசத்தில் உள்ள கீழ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதேபோல குவாலியரில் உள்ள ஐகோர்ட்டு பெஞ்சும் அவரது மனுவை தள்ளுபடி செய்து இருந்தது.
மத்திய பிரதேச ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.
அந்த மனுவில் தனது மனைவியிடம் பெண்மை இல்லை என்றும், பெண்ணுக்குரிய குணாதிசயங்கள் அவரிடம் இல்லை என்றும், அவர் பெண்ணே இல்லை என்றும், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாகவும், இதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அதோடு மனைவியின் மருத்துவ தகவல்களையும் சமர்பித்து இருந்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எம்.எம்.சுந்த ரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதுதொடர்பாக மனைவி பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.