“தமிழ்நாட்டில் நடப்பது வெறும் அறிவிப்பு ஆட்சி” என ஆளும் தி.மு.க அரசை சாடியுள்ளார் தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
இது தொடர்பாகத் தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கும் முன்பே மாணவர்களை அங்கிருந்து வெளியேற மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
போர் தொடங்கிய போது ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருந்தனர். எனவே, மாணவர்களைப் பத்திரமாக மீட்க மத்திய பாஜக அரசு ‘ஆபரேஷன் கங்கா’ எனும் திட்டத்தைத் தொடங்கியது. அதன் மூலம் 16,000 மாணவர்கள் பாதுகாப்பாக இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.
மேலும் மாணவர்களின் பயணத்துக்கும் கட்டணம் ஏதும் மத்திய அரசு பெறவில்லை. எனவே கடமை உணர்வுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் செயல்பட்டு, சாதித்துக் காட்டிய பிரதமர் மோடிக்குப் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறோம்.
தற்போது ஆறாவது விமானம் வந்த பிறகு தமிழ்நாட்டின் முதல்வர் “தமிழ் நாட்டின் மாணவர்களுக்குப் பயணக் கட்டணத்தைத் தாம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்”. இது போன்ற உப்பு சப்பில்லாத, அலங்கார அறிவிப்புகளை வெளியிட, முதல்வருக்குத் தயக்கமோ குற்ற உணர்வோ இருந்ததில்லை.
மத்திய அரசின் திட்டங்களை தன் திட்டங்களாக அறிவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களுக்கு நல்ல திட்டங்களை அறிவிக்கும் எண்ணமே இல்லை. மத்திய அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. அதனால் தான் மத்திய அரசின் நல்ல திட்டங்களை தன் திட்டம் எனத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்.
மத்திய அரசு, மிக அதிகமான மக்கள் நலத் திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதனால், அந்த திட்டங்களுக்கு, தி.மு.க.,வின் லேபிளை ஒட்டும் வேலையே, தமிழ் நாட்டு அரசுக்குச் சரியாக இருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.