தற்போது 90ஸ் கிட்ஸ் தலைமுறையினருக்கு திருமணம் நடந்து வருகிறது. காலம்காலமாக திருமணங்களுக்கு சென்றால் அந்தத் திருமண தம்பதிகளுக்கு சமையலுக்கு உதவுவது போன்ற பொருட்களை பரிசளித்து வருகிறார்கள். அது இல்லையென்றால் வால் கிளாக் பரிசளிப்பார்கள். இப்படி பரிசளிப்பது பாராட்டுக்குரிய விஷயம். ஆனால் இந்த மாதிரியான பரிசுகள் பெரிய அளவில் உற்சாகம் தருவதில்லை. நம் நண்பர்கள் அந்த மாதிரியான பரிசுகளை பார்த்து “வாவ்” என்று வியப்பதில்லை. இருந்தாலும் தம்மால் முடிந்ததை செய்கிறார்கள் என்று பரிசளித்தவருக்கு முழுமனதுடன் நன்றி சொல்வது நாகரிகம். அதை திருமண தம்பதியினர் பின்பற்றியும் வருகிறார்கள்.
காலம் கடந்து நிற்க கூடிய மனதிற்கு பிடித்தமான ஒரு பொருள் என்றால் கண்டிப்பாக அது புத்தகம் தான். அதே சமயம் புத்தகம் என்றாலே அது நல்ல புத்தகமாக தான் இருக்கும் என்று நம்புவது மடமை. ஒரு சில புத்தகங்கள் வெற்று பெருமைக்காக எழுதப்பட்டவை. அந்த மாதிரியான புத்தகங்கள் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் நம் நேரத்தை வீணடிப்பதாக மட்டுமே உள்ளன. அந்த மாதிரி புத்தகங்களை பரிசாக கொடுத்தால் தம்பதிகள் மனதில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை.
அவ்வாறு இல்லாமல் நாம் கொடுக்கும் புத்தகம் திருமண தம்பதிகளுக்கு பாசிட்டிவ் உணர்வை, பீல்குட் உணர்வை தரக்கூடியதாக வாசிப்பு பழக்கத்தை மேலும் தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படியொரு புத்தகம் என்றால் கண்டிப்பாக விகடனில் வெளிவந்த “ஆண்பால் பெண்பால் அன்பால்” புத்தகத்தை சொல்லலாம். “பாலின சமத்துவம்” உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் உண்மையான நோக்கம்.
பத்திரிக்கையாளர் அதிஷா இந்தப் புத்தகத்தை தொகுத்துள்ளார். இந்தப் புத்தகத்தில் திருநங்கை எழுத்தாளர்கள், ஆண் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் போன்ற பலதரப்பட்ட படைப்பாளிகள் தங்களின் ஆண்-பெண் உறவு பற்றிய புரிதல்கள் குறித்தும், இந்த சமுதாயத்தில் பாலின சமத்துவம் உருவாக என்ன செய்ய வேண்டுமென்ற கருத்துக்களையும் கட்டுரையாக பகிர்ந்துள்ளனர். அந்தக் கட்டுரைகள் எல்லாமே நன்றாக இருக்கிறது என்றபோதிலும் கார்ல்மார்க்ஸ் கணபதி, பா. ரஞ்சித், மூடர்கூடம் நவீன், கே.வி.ஷைலஜா போன்றோரின் கட்டுரைகள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன.
புத்தகத்தின் அட்டைப்படத்தில் உள்ள #makenewbonds என்ற வார்த்தையே ஒரு மாதிரியான பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கிறது. அந்த வார்த்தைகள் மனதை குளிர்வித்து உண்மையான புன்னகையை வர செய்கின்றன. இந்தப் புத்தகத்தில் மொத்தம் 53 கட்டுரைகள் உள்ளன. இதில் ஒரு கட்டுரையாவது கண்டிப்பாக நம் மனதை பாதிக்கும். திருமண தம்பதிகளுக்கு இந்தப் புத்தகத்தை பரிசளித்தால் பாலின ஏற்றத்தாழ்வு இல்லாமல்
பாலின சமத்துவத்தோடு வாழ வழிவகை செய்யும் என்று நம்பலாம். புதிய பயணம் தொடங்குபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மிகச்சிறந்த அன்பளிப்பாக இது இருக்கும். இந்தப் புத்தகத்தை படித்து முடித்ததும் நெஞ்சோடு அணைக்க தோன்றும். அவ்வளவு சிறப்பான, முக்கியமான புத்தகம்.
குறிப்பு: விவாகரத்துக்கள் அதிகம் நிகழ்வதே தம்பதிகளுக்குள் ஏற்படும் பாலின ஏற்றத்தாழ்வு காரணமாக தான். விவாகரத்து தருணத்தில் இருப்பவர்களும் இந்தப் புத்தகத்தை கண்டிப்பாக ஒருமுறையாவது படிக்க வேண்டும்.
–யுவராஜ் மாரிமுத்து
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.