சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலையை கோயில் குளத்தில் தேடும் பணியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொடங்கினர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் , புன்னைவனநாதர் சன்னதியில், லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது. 2004-ம் ஆண்டு குடமுழுக்கு விழாவுக்கு பின், அந்த சிலை மாயமானது. அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது.
இது ஆகம விதிகளுக்கு எதிரானது. புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கெனவே இருந்த சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
கோயில் குளத்தில் மயில் சிலை: இந்த வழக்கு கடந்தமுறை தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிலை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய 6 வார அவகாசம் அடுத்த வாரம் முடிவடைகிறது.
இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கோயில் குளத்தில் மயில் சிலை புதைக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. அந்தச் சிலையை கண்டறிய குளத்தை தோண்டுவதற்கு பதில் வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாமா என்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியை அணுகியுள்ளதாக தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் அனுமதி: காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று, குளத்தில் சிலை உள்ளதா என்பதை கண்டறிய இரண்டு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், சிலை மீட்கப்பட்ட பின் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை தள்ளிவைத்திருந்தது.
தேடும் பணி தொடங்கியது: சென்னை உயர் நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து இன்று மயிலாப்பூர் கோயில் குளத்தில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருடன் ரப்பர் படகு உதவியுடன் கோயில் குளத்தில் மயில் சிலையை தேடும் பணியைத் தொடங்கினர். மேலும், பிரத்யேக கருவிகளுடன் நீச்சல் வீரர்களும் குளத்தில் மூழ்கி மயில் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.