பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் vs போடோ (Bordeaux) அணிகள் மோதிய லீக் 1 போட்டியில் முன்னணி வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் இருவரையும் பி.எஸ்.ஜி ரசிகர்கள் கடுமையாக சாடினர். அவர்கள் பந்தைத் தொட்டாலே விசிலடித்து அவமரியாதை செய்வது, கத்துவது என தங்கள் கோவத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக மோசமாக விளையாடி அணியின் தோல்விக்குக் காரணமாக இருந்ததால் இப்படி செய்திருக்கின்றனர்.
கடந்த வாரம் நடந்த சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றின் இரண்டாவது லெக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியோடு மோதியது பி.எஸ்.ஜி. முதல் லெக்கில் 1-0 என முன்னிலையில் இருந்த அந்த அணி, இரண்டாவது லெக்கின் முதல் பாதியில் 1 கோல் அடித்து 2 கோல்கள் முன்னிலை பெற்றது. இரண்டு கோல்களையும் எம்பாப்பே தான் அடித்திருந்தார். இரண்டு கோல்கள் முன்னிலையோடு இரண்டாவது பாதியைத் தொடங்கிய அந்த அணிக்கு ரியல் மாட்ரிட் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தது.
18 நிமிட இடைவெளியில் ஹாட்ரிக் அடித்து, ரியல் மாட்ரிட் அணியை காலிறுதுக்குள் அழைத்துச் சென்றார் கரிம் பென்சிமா. இந்தப் போட்டியில் மெஸ்ஸி, நெய்மர் இருவரும் மிகவும் சுமாராகவே விளையாடியிருந்தனர். அதிலும் முதல் லெக்கில் மெஸ்ஸி ஒரு பெனால்டியை வேறு தவறவிட்டிருந்தார். அட்டாக்கில் பெரிய அளவுக்கு பங்களிக்காவிட்டாலும் டிஃபன்ஸிலாவது உதவியிருக்கலாம். ஆனால், இருவரும் அதுவும் செய்யவில்லை. அதனால், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் ரசிகர்கள் பெரும் அதிருப்திக்குள்ளானார்கள்.
இந்தப் போட்டி என்று மட்டும் இல்லை. இந்த சீசன் முழுவதுமே அவர்கள் பங்களிப்பு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. எம்பாப்பே மட்டும்தான் அட்டாக்கில் தொடர்ந்து சீராக விளையாடிக்கொண்டிருக்கிறார். அதனால்தான், அந்த அதிருப்தி கோவமாக உருமாறியது.
இந்நிலையில் லீக் 1 தொடரில் போடோ (Bordeaux) அணிக்கு எதிராக மோதியது பி.எஸ்.ஜி. அந்த அணியின் ரசிகர் குழுவான Collectif Ultras Paris, போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
‘நம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி, அணிக்கு பயன்தரக்கூடிய வீரர்களைக் கொண்டிருக்கவேண்டும். இந்த அணியால் பயனடையக்கூடியவர்கள் இருக்கக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை போர்டோ அணிக்கெதிரான போட்டியின்போது எங்கள் அதிருப்தியை நாங்கள் தெரிவிக்கபோகொறோம். மைதானத்துக்கு வரும் இந்த கிளப்பை நேசிக்கும் ஒவ்வொருவரும் எங்களோடு இணைந்து இந்த அகிம்சையான போராட்டத்தில் இணைய வேண்டுகிறோம்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
சொல்லியதைப் போலவே போட்டியின்போது அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தனர். மெஸ்ஸியோ நெய்மரோ பந்தைத் தொட்டாலே கத்தத் தொடங்கினார்கள். முதல் பாதியில் இருவரும் ஃப்ரீ கிக் எடுக்க பந்தின் முன் நின்றபோது விசிலடித்தினர். ஐரோப்பாவின் ஒருசில நாடுகளில் விசில் அடிப்பது நம் ஊரைப் போல அல்ல. அது அவமாரியதை செய்வது. அதனால், தொடர்ந்து விசிலடித்துக்கொண்டே இருந்தனர். அந்த ஃப்ரீ கிக்கை நெய்மர் தவறவிட்டபோது, நக்கலாகக் கொண்டாடினர்.
பி.எஸ்.ஜி அணியின் இரண்டாவது கோலை நெய்மர் அடித்தபோதும் கத்திக்கொண்டே இருந்தனர். அதனால், அவரும் அந்த கோலைக் கொண்டாடவில்லை. இந்தப் போட்டியை 3-0 என வென்றது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்.
கால்பந்து உலகின் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் தங்கள் சொந்த அணியின் ரசிகர்களாலேயே விமர்சிக்கப்படுவது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
மெஸ்ஸியின் நிலை இப்படியிருக்க, ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கெதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.
யுவன்டஸ் அணியிலிருந்து மான்செஸ்டர் யுனைடட் அணிக்குத் திரும்பிய ரொனால்டோ, தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி கோல்கள் அடித்தார். ஆனால், அதன்பிறகு கோல்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த மான்செஸ்டர் சிட்டி அணிக்கெதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. காயத்தால் அவர் விளையாடமாட்டார் என்று முன்பே சொல்லிவிட்டார் யுனைடட் பயிற்சியாளர் ரால்ஃப் ராக்னிக். அதுவே பெரும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. பல யுனைடட் ரசிகர்களுமே ரொனால்டோவின் ஃபார்ம் குறித்து அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கெதிரான பிரீமியர் லீக் போட்டிக்குத் திரும்பினார் ரொனால்டோ. போட்டியின் 12-வது நிமிடத்தில் ஃப்ரெட் கொடுத்த பாஸை, பாக்சுக்கு வெளியே இருந்து அட்டகாசமாக கோலடித்து மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் ரொனால்டோ.
35-வது நிமிடத்தில் ஹேரி கேன் பெனால்டி அடிக்க, போட்டி 1-1 என்றானது. மூன்று நிமிடங்கள் கழித்து, இடது விங்கில் முன்னேறி பாக்சுக்குள் வந்த ஜேடன் சான்சோ பெனால்டி ஏரியாவுக்குப் பந்தை அனுப்பினார். அதை கோலாக்கி மீண்டும் மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
72-வது நிமிடத்தில் செர்ஜியோ ரெகுயான் கோல் நோக்கி அடித்த பந்தைத் தடுக்க மகுயர் முயற்சி செய்ய அவர் மீது பட்டு பந்து கோலானது. 2-2. போட்டி சமனில் முடிந்துவிடுமோ என்று நினைத்துக்கொண்டிருக்கையில் மீண்டும் கோலடித்து மான்செஸ்டர் யுனைடட் வெற்றி பெறக் காரணமாக இருந்தார் சி.ஆர்.7. 81-வது நிமிடத்தில் யுனைடடுக்கு கார்னர் கிடைக்க, அதை பெனால்டி ஏரியாவுக்கு அனுப்பினார் அலெக்ஸ் டெல்லஸ். அதை சிறப்பாக ஹெட்டர் செய்து ஹாட்ரிக் அடித்தார். இதன்மூலம் 3-2 என வெற்றி பெற்றது மான்செஸ்டர் யுனைடட்.