புதுடெல்லி: விமானப் பயணத்தின் போது பயணிகளிடம் பேசும் ரஷ்ய விமானி ஒருவர், “உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் ஒரு குற்றம்” எனக் கூறும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானபயணத்தின் போது, பயணிகளிடம் பேசும் அந்த விமானி, தொடக்கத்தில் ரஷ்யமொழியில் பேசுகிறார். பின்னர் ஆங்கிலத்தில் பேசும் அவர், “இது எனது சொந்தக் கருத்து, விமான நிறுவனத்தின் கருத்து இல்லை. உக்ரைன் போர் என்பது ஒரு குற்றம். விவேகம் உள்ள குடிமக்கள் என்னுடைய இந்தக் கருத்தில் உடன்படுவார்கள்,இந்தப் போரை நிறுத்த நாம் ஏதாவது செய்தாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து செய்தி வெளியிட்டுள்ள இன்டிப்பெண்டன்ட் அந்த விமானி ரஷ்யர் என்று குறிப்பட்டுள்ளது.
அதே வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள உக்ரைன் தூதர் ஒலெக்ஸாண்டர் ஷெர்ப், “அந்த விமானி, ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட்டின் துணை நிறுவனமான போபேடாவில் விமானியாக பணிபுரிகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.