புதுடெல்லி: ‘உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்காக என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?’ என மத்திய அரசிடம் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு.
பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 2022 ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், இரண்டாம் அமர்வு இன்று (மார்ச் 14) தொடங்கியுள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதிஅன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று காலையிலேயே திமுக மக்களவை எம்.பி. டி.ஆர்.பாலு, நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தார்.
மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா மீண்டும் தமிழக சட்டமப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் அதன் மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில்தான் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று மக்களவை கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
அவை தொடங்கியவுடன் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, “உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்காக மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? ரஷ்யாவுடன் இந்திய அரசுக்கு இருக்கும் உறவைப் பயன்படுத்தி இந்த மாணவர்கள் ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஏற்பாடு செய்யப்படுமா?” என்று வினவினார்.
அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, “இது மருத்துவ மாணவர்கள் தொடர்பான சர்ச்சை. இது சுகாதார அமைச்சகத்தின் கீழ் வருகிறது” என்று கூறினார்.
அதேபோல் பிஎஃப் வட்டி விகித குறைப்பு குறித்து விவாதிக்க காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் நோட்டீஸ் கொண்டுவந்தன.
பிஎஃப் என அழைக்கப்படும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு 2021-222 ஆம் நிதியாண்டுக்கு வழங்கப்படும் வட்டியை 8.1 சதவீதக் குறைத்து வழங்குவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. இது இந்தக் கூட்டத்தொடரில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.