மூத்த வழக்கறிஞரும் திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் ரங்கநாதன், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஈ.சி.ஆர் சாலையில் கீழ்புதுப்பட்டு என்ற இடத்தில் வியாழக்கிழமை அதிகால நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சாலை விபத்தில் மகன் உயிரிழந்ததால் திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ துயரத்தில் மூழ்கினார். அவருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரங்கல் தெரிவித்தார். மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மூத்த வழக்குரைஞரும், திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு – மிகுந்த வேதனைக்கும் – சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானேன். ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சியின் குடும்பத்தில் ஒருவராக இருந்து பல்வேறு வழக்குகளில் கட்சிக்காக வாதிட்டு வரும் என்.ஆர்.இளங்கோ அவர்களது சகோதரர் சமீபத்தில் மறைந்த நிலையில், அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். என்.ஆர்.இளங்கோ அவர்கள் எத்தகைய வேதனைக்கு ஆளாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே உடலும் உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது.
அன்புக்குரிய மகனை இழந்து வாடும் என்.ஆர். இளங்கோவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது அமைச்சரவை சகாக்களுடன் நேரில் சென்று உயிரிழந்த ராகேஷ் ரங்கநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். திமுக என்.ஆர். இளங்கோவுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், தனது மகன் இறப்புக்கு நேரில் வந்து ஆறுதல் கூறி தேற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் அனைவருக்கும் என்.ஆர். இளங்கோ நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும், ‘கழகம் காட்டிய அன்பு கீதா உபதேசம் போல உறுதியைத் தந்தது’ என்று என்.ஆர். இளங்கோ உருக்கமாக தெரிவித்துள்ளார்.
என்.ஆர். இளங்கோ எழுதிய கடிதத்தை, திமுகவின் முரசொலி நாளேடு பிரசுரித்துள்ளது. அந்த கடிதத்தில் என்.ஆர். இளங்கோ எழுதியிருப்பதாவது:
“அன்புத் தோழா,
சாலை விபத்தொன்றி என் மகன் மரணமெய்தான். இப்போது இந்த மடல் எழுதுவது துக்கத்தினால் அல்ல.
மகாபாரதக் கதையை நாம் நம்புவதில்லை. ஆனால், உதாரணத்திற்கு எடுத்துக்காட்டலாம்தானே! ஆசிரியர் வருத்தப்படுவார். பரவாயில்லை. அவரிடம் என் வருத்தத்தை பிறகு தெரிவித்துக்கொள்கிறேன்.
அர்ஜுனன் தன் மகனுக்கு தேர் கொடுத்திருப்பான்தானே, நானும் அப்படியேதான். சக்கர வியூகத்தில் மகன் மடிந்தான். புராணத்தில் அர்ஜுனனுகுக்கு கண்ணன் கீதையால் உபதேசம் தந்தான், அவன் மீண்டு வந்திட…
கீதையின் உபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமா? அனைத்துச் சேனைக்கும்தானே!
துவண்டு இருந்தபோது கண்ணாய் வந்தார் கழகத் தலைவர்… அவர் மட்டுமா வந்தார்? தன் அமைச்சரவையையே அழைத்து வந்தார்.
கழகமே வந்திருந்து என்பால் காட்டிய அன்பும், அரவணைப்பும் கீதா உபதேசம் போல் என்னுள் உறுதியைத் தந்தது.
அண்ணன் திருச்சி சிவா, ஆ.ராசா தம் துணைவியார் இறந்தபோது நான் உடன் இருக்கவில்லை எனினும், அவர்கள் எனக்காக உயிர் உருகி ஆறுதல் கூறினர்.
அர்ஜுனன் மட்டுமா எழுந்திருப்பான்? தேரும் குதிரையும் தான் எழுந்திருக்கும், சேனைகளும் எழுந்திருக்கும், வாட்களும் வேல்களும் நிமிர்ந்திருக்கும். எதனால்? கண்ணனின் வழிகாட்டுதலினால்.
வாளாய், வேலாய், குதிரையாய் எழுந்திருப்பேன், இயக்கத்தின் சாரதியாய் கழகத் தலைவர் சொல் கேட்டு!
திராவிடத் தேர் உருண்டோடி வென்றிட உடனிருப்பேன், மீண்டு வந்திடுவேன்!
சொல்லிடுங்கள் திராவிடத் தலைவனுக்கு அவரிடன் ஓர் சொல் எல்லா மந்திரங்களையும்விட வலிமையானதென்று.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“