சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் மக்களவை உறுப்பினர் பதவியை பகவந்த் மான் ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டசபைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதனையடுத்து, அக்கட்சியின் எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில், ஆம் ஆத்மியின் சட்டசபை தலைவராக பகவந்த் மான் தோ்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், சண்டிகரில் உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் பகவந்த் மான் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார். முன்னதாக பதவியேற்பு விழா பகத் சிங்கின் கிராமமான கத்கர் கலனில் வரும் 16-ம் தேதி நடைபெறும் என முதல்வராக பொறுப்பேற்க உள்ள பகவந்த் மான் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், நாளை மறுநாள் முதல்வராக பதவி ஏற்க உள்ள பகவந்த் மான், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தனது ராஜினாமா கடிதம் அளித்தார். பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்க்ரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.