புதுடெல்லி: பஞ்சாப் முதல்வராக பதவியேற்கவுள்ள மக்களவை எம்.பி. பகவந்த் மானுடன் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் இன்று செல்பி எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
பதவியேற்பு விழா பகத் சிங்கின் கிராமமான கத்கர் கலனில் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. அவருடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.
பகவந்த் மான் தற்போது சாங்ரூர் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக இருந்து வருகிறார். முதல்வர் பதவி ஏற்கும் முன்பாக அவர் தனது எம்.பி. பதவியை நாளை ராஜிநாமா செய்கிறார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் கலந்து கொள்ள பகவந்த் மான் இன்று வந்தார். அவருக்கு பல்வறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரும் மானுக்கு வாழ்த்த தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘நாடாளுமன்ற தோழமை: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக பதவியேற்கவுள்ள பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவிக்க பல காங்கிரஸ் எம்.பி.க்கள் வந்தனர். முந்தைய மக்களவையில் 5 ஆண்டுகள் ஒரே பெஞ்சில் அமர்ந்து இருந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.
முன்னதாக 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று ஆலோசனை நடத்தியது. அதுபோலவே காங்கிரஸ் அதிருப்தி குழுவான ஜி 23 தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
அதிருப்தி குழுவை சேர்ந்த ஜி 23 தலைவர்களில் ஒருவரான சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தோல்வி குறித்து கருத்து தெரிவிக்கையில் ‘‘ நாட்டின் தேசிய கட்சிகளில் அதிக எம்எல்ஏக்களை கொண்ட எதிர்க்கட்சி காங்கிரஸ் தான். 750 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வதும், புதுப்பிப்பதும் அவசியம்’’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.