பிள்ளை வரம் அளிக்கும் பொன்னூசல் பதிகம்… திருவாசக முற்றோதல் செய்யும் அற்புதங்களில் இதுவும் ஒன்று!

‘எங்கெல்லாம் திருவாக முற்றோதல் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் பொன்னூசல் பதிகம் பாடும்போது, பிள்ளை வரம் கிடைக்காத இது போன்ற தம்பதிகள் இவ்வாறும் தொட்டில் கட்டி கூடவே பதிகம் பாடுவது வழக்கம். இப்படி பாடினால் அவர்களுக்கு விரைவிலேயே பிள்ளை வரம் கிடைத்துவிடுவதும் அதிசயம்!’ என்றார் அங்கிருந்த பெரியவர்.

சென்ற சிவராத்திரி (மார்ச் 1, 2022) அன்று திண்டிவனம் இறையானூரில் வட உத்திரகோசமங்கை எனப்படும் ஸ்ரீமங்களேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்று வந்தன. அதில் முத்தாய்ப்பாக புதுச்சேரி திருமதி.கீதா முத்தையன் குழுவினரால் திருவாசக முற்றோதல் நடைபெற்றது. கல்லும் கரைந்துருகும் அந்த புண்ணிய பாராயணத்தின் 16-ம் பதிகமான திருப்பொன்னூசல் பாடத் தொடங்க வேண்டிய வேளை. அப்போது 2 தம்பதியர் வந்து முற்றோதல் செய்து கொண்டு இருந்த அடியார்களிடம் அவர்களின் ருத்ராட்ச மாலைகள், அவர்கள் படித்துக் கொண்டு இருந்த திருவாசகப் புத்தகம் போன்றவற்றை ஒரு துண்டில் பெற்றுக் கொண்டு இருந்தார்கள்.

ஸ்ரீமங்களேஸ்வரர்

மேலும் சமய தீட்சை பெற்று கொண்ட சில அடியார்களும் தங்களது ருத்ராட்ச மாலைகளை அந்த துண்டில் போட்டு விட்டு அந்த தம்பதிகளை ஆசிர்வதித்தார்கள். இப்போது திருப்பொன்னூசல் பாடத் தொடங்கினார்கள் அடியார்கள். அந்த பாடலின் இசைக்கேற்ப தம்பதிகள் தங்கள் கையில் வைத்து இருந்த மாலைகள், புத்தகங்கள் அடங்கிய துண்டை ஒரு தொட்டிலாக பாவித்து முன்னும் பின்னும் ஊஞ்சல் போல அசைத்தபடியே இருந்தார்கள்.

கணீர் என்ற குரலில் பொன்னூசல் பதிகம் பாடியதும் அங்கிருந்த பலரும் நெகிழ்ந்து போனார்கள்.

“சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து

நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு

ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை

ஆரா அமுதின் அருள்தாளிணை பாடிப்

போரார் வேற்கண்மடவீர் பொaன்னூசல் ஆடாமோ!”

இசைக்கருவிகளும் சங்க நாதமும் மெல்லியதாகப் பரவ பொன்னூசல் பாடல்கள் ஒலிக்க அந்த இடமே சிவலோகமாகக் காட்சி தந்தது. இந்த பாடல் உத்தரகோசமங்கையில் சிவபெருமானைப் போற்றி மாணிக்கவாசகர் பாடிய பாடல். உலகாளும் ஈசனைப் பலவாறாகப் போற்றித் துதித்து மாணிக்கவாசகர் தானே பொன்னூஞ்சலில் ஆடி அசைந்து பாடியதாக ஐதீகம். மேலும் ஈசனை மானசீகமாக பொன்னூஞ்சலில் எழுந்தருளவித்துப் பாடிய பாடல் இது என்பதால், இந்த திருப்பதிகத்தைப் பாடினால் பிள்ளை வரம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் மங்கையர் பொன்னூசலில் ஏறி ஈசனைப் பலவாறாகப் புகழுந்து பாடுவது போல பாடல்கள் அமைந்து உள்ளன.

ஸ்ரீமங்களேஸ்வரர்

திருவாசகத்தின் 51 பதிகங்களில் 10 பதிகங்கள் பெண்களுக்காகவே சிறப்பாக எழுதப்பட்டன. திருவெம்பாவை, திருஅம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம் திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பொன்னூசல் என்பவை அவை. பெண்களுக்காக விசேஷமாக நல்ல வரன் அமையவும், மாங்கல்ய பலம் உண்டாகவும், செல்வவளம் சேரவும், பிள்ளை வரம் வாய்க்கவும் இவை பாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த சிவராத்திரி நிகழ்விலும் அருமையாக பொன்னூசல் பதிகம் அமைந்தது. பிள்ளை வரம் வேண்டி அந்த தம்பதிகளும் கூடவே பாடி தொட்டில் அசைத்து மனம் உருகிப் பாடிக் கொண்டிருந்தார்கள். பொன்னூசல் பதிகத்தின் 9 பாடல்களும் அழுத்தம் திருத்தமாக அழகிய இசையோடு பாடப்பட்டன. அதிலும் இறுதிப் பாடலான…

“தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை

தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி

எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்

பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட

கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்

பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ!”

என்ற பாடலைப் பாடும்போது அனைவரும் உருகி நின்றனர். ‘உத்தரகோசமங்கையில் எழுந்தருளி ஆசிரியத் திருமேனியராக மாணிக்கவாசகருக்கு அருள் செய்த தெய்வமே உன்னைப் புகழ்ந்து பொன்னூசல் ஏறி ஆடாமோ!’ என்ற மாணிக்கவாசகரின் மணித்தமிழில் எல்லோருமே உருகி நின்றோம். நம்பிக்கை தான் நம் தர்மத்தின் அடிப்படை! பிள்ளை வரம் வேண்டி நின்ற அந்த 2 தம்பதியரின் வேண்டுதல்கள் நிறைவேறி நலம் பெறட்டும் என்று அனைவரும் வேண்டிக் கொண்டனர். பிறகு பதிகம் பாடிய, அங்கு குழுமி இருந்த அத்தனை அடியார்களையும் நோக்கி தம்பதிகள் விழுந்து வணங்கினார்கள். அப்போது அவர்களை நோக்கி அட்சதைத் தூவி எல்லோரும் ஆசிர்வதித்தார்கள். மீண்டும் அவரவர் ருத்திராட்ச மாலைகளும் புத்தகங்களும் அவர்களிடமே வழங்கப்பட்டன. சுவாமியிடமும் அம்பாளிடமும் வேண்டிக் கொண்ட தம்பதிகளுக்கு விசேஷ பிரசாதங்களை வழங்கப்பட்டன.

மாணிக்கவாசகர்

‘எங்கெல்லாம் திருவாக முற்றோதல் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் பொன்னூசல் பதிகம் பாடும்போது, பிள்ளை வரம் கிடைக்காத இது போன்ற தம்பதிகள் இவ்வாறும் தொட்டில் கட்டி கூடவே பதிகம் பாடுவது வழக்கம். இப்படிப் பாடினால் அவர்களுக்கு விரைவிலேயே பிள்ளை வரம் கிடைத்துவிடுவதும் அதிசயம்!’ என்றார் அங்கிருந்த பெரியவர். ஈசன் அருள் கிடைத்தால் நடக்காதது என்று ஒன்று உண்டோ என்ன! நீங்களும் மழலை வரம் கிடைக்காத தம்பதியருக்கு இந்த விஷயத்தைச் சொல்லி அவர்களுக்கும் அருள் கிடைக்க வழி செய்யுங்கள். சிவாயநம!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.