குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கும் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை இன்று வழங்கினார்.
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 138, எம்.ஜி.ஆர் நகர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடற்புழு நீக்க நாள் முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அல்பெண்டேசோல் மாத்திரைகளை மேயர் பிரியா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மாண்புமிகு மேயர் பிரியா,
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையினால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 6 முதல் 59 மாதமுடைய குழந்தைகளில் 10 ல் 7 குழந்தைகள் (70%) ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 15 முதல் 19 வயதினரிடையே 56% பெண்களும், 30% ஆண்களும் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 50% உடல் வளர்ச்சி குன்றியும், 43% எடை குறைவாகவும் உள்ளனர். எனவே குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய குடற்புழு நீக்க நாள் அறிவிக்கப்பட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு இன்று பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள 15 லட்சத்து 55 ஆயிரத்து 354 குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயதுள்ள பெண்கள் 4 லட்சத்து 12 ஆயிரத்து 482 பேருக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
இதில் 1 முதல் 2 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு பாதி அளவு (200 mg) மாத்திரையும்,2 முதல் 19 வயது மற்றும் 20 முதல் 30 வயது உள்ள பெண்களுக்கு (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) ஒரு அல்பெண்டேசோல் மாத்திரையும் (400 mg ) வழங்கப்படும்.
இந்த குடற் புழு நீக்க நாள் முகாம்கள் வரும் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விடுபட்ட நபர்களுக்கு 21-ஆம் தேதி குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மேயர் திருமதி ஆர்.பிரியா தெரிவித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திரு. மு.மகேஷ் குமார், விருகம்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர்கள், மாநகர நல அலுவலர் மற்றும் மாநகர மருத்துவ அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.